1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படம் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதேபோல் அஜித்தின் வாலி படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


காதலர் தினத்திற்கு வெளியாகியிருக்கும் படங்கள்


உலகெங்கிலும்  பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கமிடட் ஆக இருப்பவர்கள் தங்களது காதலன் காதலிக்கு பரிசுகள் வாழ்ங்கி அன்பை காட்டினால். சிங்கிளாக இருப்பவர்கள் தனியாக தங்களது நண்பர்களுடன் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். இன்னும் சிலர் இன்றைய நாளில் புதிதாக காதலை தெரியப்படுத்துகிறார்கள். இதில் எந்த தரப்பு என்றாலும் எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலான காதலைப் பற்றிய படங்கள் திரையரங்கில் வெளியாகி இருக்கின்றன. 


சினிமாவிலும் காதல் என்பது இன்றியமையாத ஒரு அங்கமாகிவிட்டது. அந்த வகையில்  காதலர் தினத்தன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் காவியங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்து காதலர்களை மகிழ்விக்கிறார்கள். 


விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த 96,  வாரணம் ஆயிரம் , சீதா ராமம், சிவா மனசுல சக்தி, பிரேமம், டைட்டானிக், ஜப் வி மெட், உள்ளிட்டப் படங்கள் இன்று பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இவை தவிர்த்து சமீபத்தில் மணிகண்டன் நடித்து வெளியாகியுள்ள லவ்வர் படமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இன்றைய நாளில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த மற்றொரு படம் விஜய் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை.


காதலுக்கு மரியாதை






1997 ஆம் ஆண்டு ஃபாஸிலின் இயக்கத்தில் வெளியானப் படம் காதலுக்கு மரியாதை. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகுமார் , ராதாரவி, தலைவாசல் விஜய், தாமு, சார்லி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காதலர்களுக்கு மத்தியில் மிகப் பிரபலமான இந்தப் படம் இன்னும் எத்தனையோ படங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. இப்படியான நிலையில் இன்று காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகாததில் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.


இதனை ஈடுகட்டும் வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னை கமலா திரையரங்கத்தில் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.  நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்த இருக்கும் நிலையில் இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இதேபோல் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக அறிமுகமான அஜித், சிம்ரன் நடித்த வாலி படமும் அதே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.