இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்க கவிஞர் வைரமுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். 


ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 






அப்போது அவர் தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 






இதனிடையே மூன்று வார சிசிக்சைக்கு பின்னர் இயக்குநர் பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற பாரதிராஜா தற்போது முழு நேர ஒய்வில் உள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், நீலாங்கரையில் உள்ள இவர் இல்லத்திற்கு நேற்று சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் கவிஞர் வைரமுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் சென்றிருந்தனர். 






இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மீண்டும் புன்னகை மூடிக் கிடந்த வானத்தின் முதல் கீற்று நம்பிக்கை எழுதிய நல்லோவியம் "இவுக பொழப்புக்கு நீர் வார்க்கத்தான் ஈசானி மூலையில மேகம் இருக்கு" என பதிவிட்டு முகத்தில் மகிழ்ச்சி பொங்க பாரதிராஜா காரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் கவிப்பேரரசே ! உங்கள் பூங்காத்து திரும்பியதா ? மகிழ்ச்சி வெள்ளம் மனதில் பொங்கி கண்களில் வழிகிறது என கருத்து தெரிவித்துள்ளார்.