தெலுங்கு திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையிலகின் 'ரெபெல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜூ 1940 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மொகல்தூருவில் பிறந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு சிலகா கோரிங்கா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார். பல படங்களில் அழகான வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்த அவர் இதுவரை 183 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கிருஷ்ணம் ராஜூ கடைசியாக இந்த ஆண்டு வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று நந்தி விருதுகளை வென்ற நிலையில் இவரது சினிமா வரலாற்றில் ஜீவன தரங்களு, கிருஷ்ணவேணி, பக்த கண்ணப்பா , அமர தீபம் , சதி சாவித்திரி , கடகடால ருத்ரையா, மன வூரி பாண்டவுலு, ரங்கூன் ரவுடி, ஸ்ரீ விநாயக விஜயமு, சீதா ராமுலு, டாக்ஸி டிரைவர் , திரிசூலம், தர்மாத்முடு, பொப்பிலி பிரம்மண்ணா, தந்திர பாப்ராயுடு, மரண சாசனம், விஸ்வநாத நாயகுடு, ஆன்டிமா தீர்ப்பு, பாவா பாவமரிதி, பல்நட்டி பௌருஷம் ஆகியவை மிக முக்கிய படங்களாகும்.
1990களின் பிற்பகுதியில் கிருஷ்ணம் ராஜூ அரசியல் களம் கண்டார். அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 1998-1999, 1999-2004 என 2 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 1999 முதல் 2004 வரை ஆட்சியமைத்த வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் ராஜமுந்திரி தொகுதியில் எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கோபி கிருஷ்ணா மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களையும் அவர் தயாரித்துள்ளார். 83 வயதான தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த கடந்த சில மாதங்களாகவே கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கிருஷ்ணம் ராஜூவுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர் நடிகர் பிரபாஸின் மாமா ஆவார். கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.