1990 ஆம் ஆண்டு பிரஷாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவேரி. ஆங்கிலோ இந்திய பின்புலத்தைக் கொண்ட இவர் திரைப்படங்கள் தவிர்த்து மெட்டி ஒலி , வம்சம் போன்ற பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் இருந்து விலகியபின் தொடர்ச்சியாக சின்னத்திரையில் தோன்றி வந்த காவேரி அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்கள் அவரது திரைப்பயண்த்தை எப்படி தீர்மானித்தன என்பதை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்
சினிமா மீது ஆர்வம் கிடையாது
”ஆங்கிலோ இந்தியனாக இருந்தாலும் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே சுத்தமாக கிடையாது. வைகாசி பொறந்தாச்சு படத்தின் இயக்குநர் ராதா பாரதியின் அண்ணன் பூந்தோட்ட காவல்காரன் என்கிற படத்தை இயக்கி வந்தார். அப்போது நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வாணி விஸ்வநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டிருந்தார்கள். என்னுடைய மொத்த குடும்பமும் மீடியாவில் இருந்தார்கள் என்னுடைய தந்தை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் பெரிய ட்ரம்மராக இருந்தார். ட்ரம்ஸ் சிவமனி என்னுடைய தந்தையிடம் உதவியாளராக இருந்தார். என்னுடைய வீட்டில் நான் ஒரே மகள் என்பதால் அப்போது என்னை நடிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ராதா பாரதி அவர்கள் தன் படத்தில் என்னை நடிக்க வைக்க என் குடும்பத்தினரை பெரும் முயற்சிகளுக்குப் பிறகு சம்மதிக்க வைத்தார். என்னுடைய 12-ஆம் வகுப்பு முடிந்தவுடன் சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது கரெஸ்பாண்டென்ஸில் கல்லூரி படிப்பை படிக்க திட்டமிட்டிருந்தேன் ஆனால் வைகாசி பொறந்தாச்சு படம் படுவேகமாக நடைபெற்றது. நான் பிரஷாந்த் இயக்குநர் என அந்த படத்தில் நடித்த வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் புதிய முகங்களாக இருந்ததால் மிக சவாலானதாக இருந்தது. கிட்டதட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாக அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. என் வாழ்க்கையை மாற்றியது அந்த தருணம் தான். சினிமாவிற்கு வரவில்லை என்றால் என் வாழ்க்கை வேறு மாதிரியானதாக இருந்திருக்கும். இந்த தொழிலுக்குள் வந்த பின் என் வாழ்க்கை புதிய ஒரு திசையில் சென்றிருக்கிறது.” என்று சினிமாவில் தன்னுடைய தொடக்க காலத்தைப் பற்றி கூறியுள்ளார் காவேரி.
ஒரு பெரிய ப்ரேக்
”நான் சினிமாவில் நடிக்க முடிவு செய்தபோது மிக தெளிவாக ஒரு முடிவு எடுத்திருந்தேன். மற்றவர்களைப் போல் வழக்கமான ஆபிஸ் வேலையைப் போல் தான் நான் இந்த வேலையையும் கருதப்போகிறேன் என்று. மீடியா என்பது உங்களை புகழின் வெளிச்சத்தில் வைத்திருக்கக் கூடிய ஒரு இடம். அந்த வெளிச்சம் திடீரென்று இல்லாமல் போனால் அது உங்களை மிகவும் பாதிக்கும். நான் இந்த முடிவை எடுத்தது என்னை இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து காப்பாற்றியது.
வம்சம் தொடர் முடியும் தருணத்தில் என்னுடைய அம்மால் காலமானார். அதை தொடர்ந்து நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த காலத்தில்தான் என்னுடைய கல்யாணம் நடந்து முடிந்தது. நானும் என்னுடைய கணவரும் கிருஷ்ணகிரி அருகில் ஒரு பண்ணை வீட்டை கட்டி அதில் வசித்து வந்தோம். தற்போது ஒரு சில வேலைகள் இருப்பதால் சென்னை இருக்கவேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு தைராய்டு இருப்பதால் அதற்கான மருந்துகள் எடுத்து வருகிறேன் . இந்த மருந்துகள் எடுப்பதால் உடல் எடையையும் குறையத் தொடங்கியிருக்கிறது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை
அவ்வப்போது ஒரு சில தொடர்களைப் பார்ப்பேன். சிலருடன் நடிக்க வேண்டிய ஆசை இருக்கிறது. சமுத்திரகனி அவர்களுடன் சீரியலில் வேலை செய்திருக்கிறேன். படத்தில் நடிக்க வேண்டும் , விஜய் சேதுபதி அவர்களுடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு மிகப்பெரிய ஆசை இருக்கிறது. அதே நேரத்தில் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும். ஒரு சில தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நமக்கு என்ன ஹீரோயின் ரோலா தரப்போறாங்க. ஏதாவது துணை கதாபாத்திரம்தான் வரும். வாய்ப்புகள் வந்தால் நான் நிச்சயம் நடிக்க தயாராக இருக்கிறேன்.