தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லியாக மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் தரமான வில்லியாக தடம் பதித்தவர் நடிகை வடிவுக்கரசி. அன்னையர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை வடிவுக்கரசி தனது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் கஷ்டங்களை குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.
குடும்பம் தான் காரணம்:
"சினிமாவில் நான் ஒரு வேலைக்கு போவது போல தான் சேர்ந்தேன். காரணம் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம் எங்களுடையது. மிகவும் ரிச்சான குடும்பம் எங்களுடையது. கான்வென்டில் தான் நாங்கள் படித்தோம். வசதியாக இருந்த எங்களின் குடும்பம் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடியது. என்னுடைய 17 வயதில் நான் வேலைக்கு போய் சம்பாதித்து எனது குடும்பத்தை முன்பு போலவே சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டும் தான் அன்றும் இன்றும் எனது மனதில் உள்ளது.
எத்தனை நாள் வேலை?
பி.யு.சி வரை படித்ததால் தூர்தர்ஷனில் வேலை கிடைத்தது. அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க கூடாது என எனது தந்தை கண்டித்ததையும் கேட்காமல் நடித்தேன். பெரிய விருது வாங்க வேண்டும், பிரபலமாக வேண்டும் என்பது எல்லாம் எனது நோக்கமே அல்ல. குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவு தான். ஒரு சீரியல் அல்லது பட வாய்ப்பு வந்தால் உடனே எனது எண்ணம் எல்லாம் சினிமா என்றால் எத்தனை நாள், சீரியல் என்றால் எத்தனை வருஷம் வேலை இருக்கும் என்பதை மட்டுமே யோசிப்பேன்.
பண நெருக்கடி:
அன்று எனது அம்மா, அப்பா, தங்கைக்காக வேலைக்கு சென்றேன். தற்போது எனது மகள், பேத்திக்காக ஓடி கொண்டு இருக்கிறேன். அது தான் என்னை இன்றும் நடிக்க வைத்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கலகட்டத்திலும் பண நெருக்கடி என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரையில் யாரிடமும் எதற்காகவும் நிற்கக்கூடாது. என்னால் முடிந்த வரையில் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறன்.
தன்னம்பிக்கை தான் காரணம்:
நான் எனது வாழ்க்கையில் எனது அம்மாவை தான் மிக அதிகமாக மிஸ் செய்கிறேன். அவர் மட்டும் இல்லை என்றால் எனது மகளை பார்த்து கொள்ளவில்லை என்றால் என்னால் வேலைக்கு சென்று இருக்க முடியாது. இன்று இப்படி உங்கள் முன்னால் இருந்து இருக்க முடியாது. எனது தன்னம்பிக்கை மட்டும் தான் இன்று வரை என்னை நிலைநிறுத்தியுள்ளது" என்றார்.