விஜய் டிவியின் ப்ராடக்ட்கள் பலரும் மிகப்பெரிய அளவில் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையுலும் செலிபிரிட்டிகளாக ஜொலித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் வைகைப் புயலின் ஜெராக்ஸ் காபியாக வலம் வந்த வடிவேலு பாலாஜி (Vadivel Balaji).
வடிவேலுவை போலவே மிமிக்ரி, பாடி லேங்குவேஜ், ரியாக்ஷன் என அசத்தியதால் அவர் வடிவேலு என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். காமெடியால் மக்களை மயங்கச் செய்து கவலை மறந்து சிரிக்க வைத்த கலைஞன் வடிவேல் பாலாஜியின் பிறந்த தினம் இன்று. அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் தன்னுடைய அசைக்க முடியாத நினைவுகளால் இன்றும் வாழ்கிறார்.
முதல் வாய்ப்பு :
மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த வடிவேல் பாலாஜி, நடிப்பின் மீது உள்ள அதீத ஆர்வத்தால் பல போராட்டங்களையும் தடங்கல்களை தாண்டி சென்னைக்கு வந்து படாத பாடுபட்டு வாய்ப்புகளுக்காக அழைத்து திரிந்தார். அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி. அதில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
அசாத்திய திறமை:
பின்னர் சிவகார்த்திகேயன் ஒரு ஆங்காராக இருந்து தொகுத்து வழங்கிய 'அது இது எது’ நிகழ்ச்சி மூலம் அசாத்திய நகைச்சுவையை கொட்டி மக்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். சிரிச்சா போச்சு ரவுண்டில் விடாப்பிடியாக சிரிக்க மாட்டேன் என மல்லுக்கட்டும் போட்டியாளர்கள் கூட, வடிவேலு பாலாஜியின் முக பாவனைகளை பார்த்து அவுட் ஆகியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் விரும்பும் சுற்று அதுவாகவே இருந்தது. அதே போல அவர் பெண் வேடமிட்டு நகைச்சுவை செய்வதையும் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள். ஸ்ட்ரெஸ் பாஸ்டராக இருந்த வடிவேல் பாலாஜி காமெடி பார்வையாளர்களின் கவலைகள் அனைதையும் மறக்கடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும் மேஜிக் என்றால் அது மிகையல்ல.
வறுமையில் சோகம்:
சின்னத்திரையில் கலக்கிய வடிவேல் பாலாஜி கோலமாவு கோகிலா, யாருடா மகேஷ், பந்தயம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். வெளிநாடுகளில் கூட நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மிகவும் சிறப்பாக சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பயணித்து வந்த அவர், திடீரென உடல் நலல்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் மருத்துவச் செலவுகளை குடும்பத்தினரால் சமாளிக்க முடியாத சூழல் ஏற்படவே அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு கடைசியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே உயிர் பிரிந்தது.
பலரின் கவலையையும் மறக்க வைத்த ஒரு கலைஞன் கடைசியாக மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் வாடி உயிர் இழந்தது அவரின் ரசிகர்களுக்கு இன்று வரை ஆறாத காயமாகவே உள்ளது.