செம்மஞ்சேரி: பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி (வயது 21) திருநங்கை. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர்கள் அவரை காணவில்லை என நீலாங்கரை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தாழம்பூர் ஆகிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


திருநங்கை கொலை:


புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சிம்மியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 28 ஆம் தேதி செம்மஞ்சேரி, ராஜீவ் காந்தி சாலை அடுத்து முட்புதரில் அழுகிய நிலையில் ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர் உடலில் வெட்டுக் காயம் இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.


இதனால் சிம்மியின் பெற்றோரை அழைத்துள்ளனர். அவர்கள் அந்த உடலை பார்த்து சிம்மி என உறுதி செய்தனர். பின்னர் சிம்மியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் சிம்மி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவர் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை தொடங்கினர்.


5 திருநங்கையினர் கைது:


பின் உடல் மீட்கப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிம்மி உடல் கிடைத்த இடத்தில் 4 திருநங்கைகள் வெளியே வந்தது தெரியவந்தது. இதனால் இவர்கள் சிம்மி கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் அந்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.


இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி 60 கிலோ கஞ்சா பிடிபட்ட வழக்கில் ஐந்து திருநங்கையினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த திருநங்கையரான அபர்ணா (வயது 27), ஆனந்தி (வயது 37), ரதி (வயது 36), கண்ணகி நகரைச் சேர்ந்த அபி (வயது 32), ஆகியோர் கஞ்சா தொழிலில் இருந்த போட்டியின் காரணமாக சிம்மியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையின் அடைத்தனர்.