தமிழகத்தையே உலுக்கிய வாச்சாத்தி உண்மை சம்பவம் திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


1992ம் ஆண்டு தமிழக அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை நடிகையும், இயக்குநருமான ரோகிணி திரைப்படமாக எடுக்க உள்ளார் என்றும், அதில் ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோமோல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார் என்றும் படத்தின் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. 


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கும் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்களை பதுக்கி வைக்கபட்டதாக கூறி, அந்த கிராமமே அழிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறையினரால் சோதனை நடத்தப்பட்ட கிராமத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இளம்பெண்களை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கிராமத்தில் உள்ள ஆண்களை விடிய விடிய கட்டிப்போட்டு அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 


இந்த கொடூர சம்பவம் குறித்த விசாரணை 1995ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் இந்திய வனத்துறையை சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய்த்துறை அதிகாரிகள் என மொத்தமாக 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாச்சாத்தி வன்முறை தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், 2011ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் தீர்ப்பு வழங்கியதில். அதில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், எஞ்சிய 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.  


இதில், தண்டனை பெற்ற வனத்துறை அதிகாரிகளான பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் வாச்சாத்தி வன்முறையில் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் 50 சதவீத தொகை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி ஒரு கிராமமே அழிந்த சம்பவம் திரைப்படமாக எடுக்கப்படுவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


 


மேலும் படிக்க: Leo: லியோ வில்லன்களை காமெடியனாக்கிய ப்ளூ சட்டை; சமூக வலைதளங்களில் வச்சு செய்யும் ரசிகர்கள்!


Leo Box Office: பிளடி ஸ்வீட்..! லியோ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு - 2023ல் இந்திய அளவில் முதலிடம்