Leo Box Office: விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும்,  148.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


 






வசூலில் அசத்தல்:


நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் லியோ தான் எனவும், அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதோடு, முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் வரிசையில், லியோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, முதல் நாளில் RRR திரைப்படம் ரூ.257.15 கோடி,  பாகுபலி 2 ரூ.217.52 கோடி, KGF அத்தியாயம் 2 ரூ. 165.37 கோடி வசூலித்துள்ளது. அதனை தொடர்ந்து லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148.5 கோடி ரூபாயை வசூலித்து நான்காவது இடத்தை எட்டியுள்ளது.


வசூல் விவரம்:


வசூல் தொடர்பான தகவலின்படி, “தமிழ்நாட்டில் ரூ.38 கோடியும், கேரளாவில் ரூ.11 கோடி, கர்நாடகாவில் ரூ.14 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.15 கோடி, இந்தியில் ரூ. 4 கோடி இந்தியாவில் மட்டும் ரூ.82 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் முதல் நாளில் ரூ.66 கோடி என முதல் நாளில் மட்டும் ரூ.148 கோடி வசூலை ஈட்டியுள்ளது” எனகூறப்படுகிறது.


முதல் நாள் வசூலில் சாதனை:


அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம், உலகளவில் முதல் நாளில் ரூ.129 கோடி வசூலித்தது. நடப்பாண்டில் இந்திய சினிமா முதல் நாளில் ஈட்டிய மிகப்பெரிய வசூலாக இருந்தது.  அதனை 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் முறியடித்துள்ளது. ஒரு தமிழ் படத்திற்கு உலகளவில் கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங்காக இது மாறியுள்ளது. நடப்பாண்டில்  ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவில் ஒரு தமிழ்படமாக லியோ அதிகப்படியான வசூலை ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படமாகவும் லியோ பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கும் தொடர் விடுமுறை என்பதால், லியோ படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கருதப்படுகிறது. அதோடு, ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை லியோ படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.