லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நேற்று அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஸ்கின் , சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் குட்டி, தினேஷ் மாஸ்டர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்துள்ள நிலையில் விஷ்னு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஒளிப்பதி மனோஜ் பரமஹம்சாவாலும் படத்தொகுப்பு பிலோமின் ராஜும் கையாண்டுள்ளார்கள். இயக்குநர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்கள். 


லியோ படம் எப்படி?


விஜய் ரசிகர்களால் நூற்றூக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டாலும் லியோ திரைப்படம் லைட்டாக சறுக்கியுள்ளதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். பெரும்பாலான ரசிகர்கள் படம் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சொதப்பி இருப்பதாக உணர்கிறார்கள். அட்டகாசமான முதல் பாதி இருந்தாலும் படத்தின் பிரதான வில்லன்கள் என்று நினைக்கப் பட்ட அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் கதாபாத்திரங்கள் இரண்டாம் பாதியில் இருந்து தான் தொடங்குகின்றன.


அதுவும் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை. இது தவிர்த்து முழுவது ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் இரண்டாம் பாதி கதையாகவும் அவ்வளவு அழுத்தமாக இல்லை. இதனால் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையே படம் பெற்று வருகிறது.


லியோ முதல் நாள் வசூல்


விமர்சன ரீதியாக படம் சறுக்கி இருந்தாலும் வசூல் ரீதியாக எதிர்பார்ப்புகளுக்கு சிறு அளவும் குறையாமல் அதிரடி காட்டியிருக்கிறது லியோ திரைப்படம். ரூபாய் 300 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள லியோ திரைப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவது ரூ 140 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 900 திரையரங்குகளில் வெளியான லியோ ரூ.30 கோடியும், கேரளாவில் ரூ.11 கோடி, கர்நாடகாவில் ரூ.14 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.15 கோடி, இந்தியில் ரூ. 4 கோடி இந்தியாவில் மட்டும் ரூ.74 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் முதல் நாளில் ரூ.66 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.


 வன்மத்தை கக்கிய ப்ளூ சட்டை மாறன்






இந்நிலையில் லியோ படத்தை விம்ர்சித்து திரைப்பட கருத்து பதிவர் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். படத்தின் வில்லன் கதாபாத்திரங்கள் சிறப்பாக இல்லாததை சுட்டிகாட்டி கிண்டல் செய்யும் விதமாக லியோ படத்தில் உங்களுக்கு பிடித்த காமெடியன் யார் என்று இணைய வாக்குபதிவு ஒன்றை தொடங்கியுள்ளார் ப்ளூ சட்டை. இதில் சாண்டி மாஸ்டர், அர்ஜுன் , சஞ்சய் தத். அனுராக் காஷ்யப் ஆகியவர்களின் பெயர்களை சேர்த்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆவேசமடைந்து அவரை தாக்கி பதிவிட்டு வருகிறார்கள்.