நடிகர் தனுஷ் நடித்து வெளியாக உள்ள ‘வாத்தி’ (Vaathi) திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 10 -ம் தேதி வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் (G.V.Prakash Kumar) அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 


தமிழ் சினிமா இந்த ஆண்டு பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அதில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' உள்ளிட்ட படங்களும் அடங்கும். நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரின் நடிப்பில் வெளியான இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு,  ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை ஈட்டியது. 






இந்நிலையில், தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி (Venky Atluri) இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வாத்தி படம் வெளியாக உள்ளது.  கல்வி என்பது பாடப்புத்தில் இருப்பது மட்டும் இல்லை. கல்வி என்பது புத்தகங்கள், மார்க் மற்றும் தேர்வு முடிவுகள் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பாளரான சித்தாரா எண்டர்டெய்ண்மெண்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருந்தார். 


இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


வாத்தி திரைப்படம் அடுத்த மாதம் (டிசம்பர், 2) 2-ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவில்லை என்று வெளியான செய்தி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தனுஷிற்கு சிறப்பான ஆண்டு :


திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த 'நானே வருவேன்' திரைப்படமும் அவர் ஒரு தரமான நடிகர் என்பதை மற்றுமொருமுறை வெளிப்படுத்தியது. 


பிப்ரவரியில் வாத்தி ரிலீஸ் :


தமிழில் 'வாத்தி' என்ற தலைப்பிலும் தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.  


கல்வி சார்ந்த திரைப்படமாக இருப்பினும், அதன் பின்னணியில் அரசியல் பேசும் ஒரு திரைப்படமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் டோலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதால் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என தெரிகிறது. விரைவில் இது குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.