சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது சிறு சிறு வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், நாளடைவில் வளர்ந்து தங்களுக்கு என்று, ஒரு குழுவை உருவாக்கி பெரிய ரவுடிகளாக வலம் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

 

குறிப்பாக தாம்பரம், குன்றத்தூர், படப்பை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகள், தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு. அதுபோல, பெரிய ரவுடிகளை காவல்துறையினரும் கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் கொட்டத்தை அடக்கி வருகின்றனர். தென் சென்னை, தமிழக ஆந்திரா எல்லையில் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயலியில் ஈடுபட்டு வந்த சீசிங் ராஜா , கைது செய்யப்பட்டுள்ளார்.

 



 

சீசிங் ராஜா

 

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம்  பகுதியை சேர்ந்தவர் ராஜா (எ) 

சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளியாக வளர்ந்தார். ராஜா சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல தொழிலதிபர்களை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
  

 

33 வழக்குகள்..

 

சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள காவல் நிலையங்களில்,  5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள், ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.  ராஜா மீது இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 



 கட்டப்பஞ்சாயத்து

 

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி, சென்னை வேளச்சேரி ராம்நகர் பகுதியில் சேர்ந்த தியாகராஜன் என்பவர் சேலம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அதேநேரம், இந்த இடம் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர்  தனக்கு சொந்தமானது எனக் கூறி வருகிறார். இவ்வாறு இருவரும் தங்களது இடம் எனக் கூறிக் கொள்ளும் நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.  

 

 

மிரட்டல் விடுத்த ராஜா

 

 

இந்த நிலையில் ராஜா தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, தியாகராஜன் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் மிரட்டி உள்ளார். இது தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ராஜாவின் நெருங்கிய கூட்டாளிகளான கிறிஸ்டோபர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 

 



கையில் துப்பாக்கியுடன்

 

 

ராஜா சென்னை புறநகர் பகுதியில் இருந்து தப்பித்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வராமல் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல ராஜாவிடம் எப்பொழுதும் துப்பாக்கி  இருக்கும் என்பதால், காவல்துறையினர் சரியாக திட்டம் தீட்டி ராஜாவை கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து நேற்று சென்னை தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் , தமிழக ஆந்திரா எல்லையில் பதுங்கி இருந்த ராஜாவை, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடமிருந்து நவீன கைத்துப்பாக்கி, 11 தோட்டாக்கள், 7 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். அப்பொழுது ராஜாவின் வலது காலில் சிறிதளவு முறிவு ஏற்பட்டதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட ராஜாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.