தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்களில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் தற்போது துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.நானே வருவேன் படத்துக்கு பிறகு தனுஷ் தெலுங்கில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கும் இப்படம் தமிழிலும் நேரடி தெலுங்கு படமாகவும் வெளியாகிறது.  


 






இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. பூஜையில் தனுஷுடன் நடிகை சம்யுக்தாவும் கலந்துகொண்டார். வாத்தி படத்தில் சம்யுக்தாதான் நாயகியாக நடிப்பதாக அப்போதே படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் தனுஷ் படத்தில் இருந்து சம்யுக்தா விலகுவதாகவும், படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் பலரும் பல்வேறு யூகங்களை கிளப்பினர்.


இந்நிலையில் இந்த தகவல் தொடர்பாக வாத்தி படக்குழு வட்டாரம் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளதாம். வாத்தி படத்தில் இருந்து சம்யுக்தா விலகிவிட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க தவறான தகவல். அப்படி எதுவுமே இல்லை. சம்யுக்தா வாத்தி படக்குழுவில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் சம்யுக்தா படப்பிடிப்பையே தொடங்கிவிட்டார். அவர் வெளியேறுகிறார் என வெளிவரும் தகவல் எல்லாம் வதந்தி தான் எனக் குறிப்பிட்டுள்ளது.






 


இதற்கிடையே வாத்தி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடக்கம் தொடர்பான அறிவிப்பின்போதே போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. அந்தப் போஸ்டரில் தனுஷ் மாணவர் லுக்கில் இருக்கிறார். இப்படத்தில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது மாணவர் லுக்கில் அவர் இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.