மக்களவைத் தேர்தல் 2024
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப் பட்டன. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கி நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் தேதி காலையில் தொடங்கி தேர்தலில் வெற்றியாளர்கள் அறிவிக்கப் பட்டார்கள். இதில் பாஜக அதிகபட்சமாக 240 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும், தனிப்பெரும்பான்மைக்கான 272 இடங்களை விட, 32 இடங்கள் பின்தங்கியுள்ளன. இதனால், கடந்த இரண்டு மக்களவை தேர்தலை போன்று இல்லாமல், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகிறது. அமைச்சரவையில் எந்த கட்சிக்கு எந்தெந்த துறைகளை ஒதுக்குவது என்று தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதைதொடர்ந்து, வரும் 8ம் தேதி மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் தோல்வியை சந்தித்த பாஜக
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சிகரமான சில திருப்பங்கள் நடந்தேறியுள்ளன. அதில் முக்கியமான ஒரு திருப்பமாக அயோத்தி இருக்கும் ஃபைசாபாத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் லல்லு சிங் தோல்வியை குறிப்பிடலாம். கடந்த 2 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜவை சேர்ந்த லல்லு சிங் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி கட்சிகள் வலுவாக இருந்தது தான். இந்நிலையில் இம்முறையும் பாஜக தரப்பில் லல்லு சிங் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி தரப்பில் அவதேஷ் பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சச்சிதாந்த் பாண்டே களம் கண்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதி கட்சி சார்பாக அவதேஷ் பிரசாத் வெற்றிபெற்றுள்ளார்.
அயோத்தியில் மிக கோலாகலமாக ராமர் கோயிலை நிறுவியது தேர்தலில் கண்ணை மூடிக் கொண்டு வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையை பாஜகவுக்கு அளித்தது. ஆனால் லல்லு சிங்கின் தோல்வி பாரதிய ஜனதா கட்சியினரின் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
அயோத்தி மக்கள் சுயநலம் பிடித்தவர்கள்
இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் பிரபல ராமாயண தொலைக்காட்சி நடிகர் சுனில் லாக்ரி. 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணம் தொடர் மக்களிடம் பெரும் கவனமீர்த்தது. இதில் லட்சுமணனாக சுனில் லாக்ரி நடித்திருந்தார். அயோத்தியில் பாஜக தோல்வியை சந்தித்தது தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது ஆதஙகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த பதிவில் அவர் “அயோத்தி மக்கள் சுயநலம் பிடித்தவர்கள். இதே மக்கள் தான் சீதையின் புனிதத்தை கேள்வி கேட்டார்கள். இன்று இதே மக்கள் தான் அவர்களின் கடவுளான ராமரை ஒரு கூடாரத்தில் இருந்து கோயிலுக்கு கொண்டு வந்த தலைவனை ஏமாற்றியிருக்கிறார்கள். அயோத்தி மக்கள் தங்கள் அரசர்களையே ஏமாற்றக் கூடியவர்கள் என்பதற்கு வரலாறே சான்றாக இருக்கிறது. இந்த நாடு இனி ஒருபோதும் உங்களை மதிப்புளிக்காது” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்