கார் விபத்தில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகை உயிர் பிழைப்பது கடினம் என தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
தி லாஸ்ட் நைட், வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட் உள்ளிட்ட படங்களிலும், அனதர் வேர்ல்ட் என்ற அமெரிக்க டிவி தொடரிலும் நடித்து பிரபலமான நடிகை அன்னே ஹெச், கடந்த வாரம் தனது மினி கூப்பர் காரில் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானதோடு, தீப்பிடித்தும் எரிந்தது. இதில் வீட்டில் முன்பகுதியும் சேதமடைந்தது. இதனையடுத்து தகவலறிந்து 60க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அன்னே ஹெச் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவருக்கு முதுகுப்பகுதியில் அதிகமான தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அன்னே ஹெச் உயிர் பிழைப்பது கடினம் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் மது அருந்து விட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அன்னே ஹெச் உயிருக்கு போராடுவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்