கவர்ச்சியான, மாடல் ஆடைகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் உர்ஃபி ஜாவேத், பிரபல பாலிவுட் எழுத்தாளருக்கு கொடுத்துள்ள பதிலடி பேசு பொருளாகியுள்ளது.
இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள், குறிப்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எப்படியும் வைரலாகிவிட வேண்டுமென்று சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் நடிகை உர்ஃபி ஜாவேத். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி இவர். மாடலான , கவர்ச்சி ஆடையை அணிந்து வரும் உர்ஃபி, சந்தித்த பிரச்னைகளும், அதற்கு அவர் கொடுக்கும் பதில்களும் மிகவும் பிரபலம். அந்த வரிசையில் அவரைத்தேடி மீண்டும் ஒரு சர்ச்சை வந்திருக்கிறது. ஆம் அண்மையில் நடிகை உர்ஃபி ஜாவேத், வழக்கம் போல தனக்கே உரித்தான பாணியில் ஆடை என்று தயாரிக்கச்சொல்லி ஒன்றை அணிந்து வந்தார். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்த நிலையில், பாலிவுட் பிரபல எழுத்தாளராகவும், வசனகர்த்தாவாகவும் வலம் வரும் சேத்தன் பகத் உர்ஃபி ஜாவேத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில், “இந்த காலத்தில் இளைஞர்களில் கவனத்தை சிதறடிப்பதில் முக்கியப்பங்கு மொபைல் போனுக்கு இருக்கிறது. குறிப்பாக, ஆண் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் அதிக நேரத்தை செல்விடுகின்றனர்.
உங்கள் எல்லோருக்கும் உர்ஃபி ஜாவேத்தை நன்றாகத்தெரியும். அவருடைய புகைப்படங்களை வைத்து என்ன செய்வீர்கள்? இது உங்கள் பரீட்சைக்கு வருமா? அல்லது நீங்கள் வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் போது, நேர்காணல் செய்பவரிடம் அவளுடைய அனைத்து ஆடைகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும் என்று சொல்லுவீர்களா? உள்ளிட்ட பல கருத்துக்களை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில், இவரது பேச்சுக்கு நடிகை உர்ஃபி தற்போது பதிலளித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ கற்பழிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை நிறுத்துங்கள். ஆண்களின் நடத்தைக்கு பெண்களின் ஆடைகளை குறை சொல்வது 80ஸ் ஆண்களின் குணம் சேத்தன் பகத்.
உங்கள் பதின் பருவத்தில் நீங்கள் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பியபோது, உங்கள் கவனத்தை திசை திருப்பியது யார்? எப்போதும் எதிர் பாலினத்தையே குறை சொல்லுங்கள்; உங்கள் சொந்த குறைபாடுகள் அல்லது தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்றவர்கள்தான் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள், நான் அல்ல. இது தவறு செய்யும் போது, பெண்கள் அல்லது அவரது ஆடைகள் மீது பழி சுமத்த ஆண்களை ஊக்குவிக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.