பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்த முறை இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அக்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஸ்மிருதி இராணி வாக்கு சேகரிப்பு:


காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக என குஜராத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதனால், ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் அரங்கு ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கட்சி மகளிர் பிரிவினரிடையே உரையாற்றினார். 






 


ஸ்மிருதி இராணியிடம் தொண்டர் கோரிக்கை:


ஸ்மிருதி உரையாற்றும்போது இடைமறித்து பேசிய அரங்கில் இருந்த பெண் ஒருவர், எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.  பணவீக்கம் உயர்ந்துள்ளது, அதோடு எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்தால், எங்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார். அந்த பெண் பேசி முடித்ததும் அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி, கோரிக்கை வைத்த நபரை உற்சாகப்படுத்தினர். ஆனால்,  அந்த பெண்ணின் கோரிக்கையை முழுமையாக தலையை அசைத்தவாறு கேட்டும், அமைச்சர் எந்தவொரு பதிலையும் கூறாமல் சிரித்தவாறு மழுப்பியதாக கூறப்படுகிறது.


ஸ்மிருதி இராணியை சாடும் காங்கிரஸ்:


இதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், எரிவாயு சிலிண்டர் ரூ.400-க்கு விற்றபோது ரோட்டில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்ட ஸ்மிருதி இராணி, தற்போது வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பதாக சாடியுள்ளது. முன்னதாக, 2014-க்கு முன்பாக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து, சாலையில் அமர்ந்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மாட்டுவண்டியில் சென்றும் ஸ்மிருதி இராணி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இது பொதுமக்களிடையே நல்ல கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.