லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் உலகளவில் இதுவரை 540 கோடிகள் வசூல் ஈட்டியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
லியோ வெற்றி விழா
முன்னதாக லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தபோது அதற்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதால் விஜய் மக்கள் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் மேலும் படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் என பல தரப்புகளில் இருந்து அழுத்தம் இருந்ததால் போதுமான பாஸ்களை படக்குழுவினால் வழங்க முடியாமல் போனது.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் கூட்ட நெரிசலை சமாளிக்க போதுமான பாதுகாப்பு வசதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த முடிவை படக்குழு எடுத்தது. தற்போது லியோ படத்தின் வெற்றிவிழாவிற்கு இதே சிக்கல் எழுந்துள்ளது.
காவல்துறை கேள்வி
இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆலோசனை வழங்கி வெற்றி விழா நடத்த அனுமதி வழங்கியது. அதன்படி வெற்றிவிழா நடத்த இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று காவல்துறை கூறியுள்ளது. அவை பின்வருமாறு..
விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ அதுவரைதான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்துக்கு அனுமதி இல்லை.லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சிக்கு 200 முதல் 300 கார்கள் வரை மட்டுமே வரலாம்.நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மொத்தம் 8,000 இருக்கைகள் உள்ளன. 6,000 இருக்கைகள் ஒதுக்கப்படும்.
ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதார் அட்டை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு லியோ வெற்றி விழா தொடங்கி நடைபெறும் நிலையில் மாலை 4 மணிமுதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனக் காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் அட்டையின் நகல் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
சிறப்பு பேண்ட்
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விஜய் ரசிகர்களுக்கு கையில் அணியும் வகையிலான சிறப்பு பேண்ட் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த பேண்டில் லியோ என்று இருக்க அதன் இரண்டு பக்கமும் நண்பா நண்பி என்று எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நிச்சயம் கலந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையில் விஜய் பேசுவதை கேட்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மட்டும் அனுமதித்துள்ளதாக சொல்லப்படுவதால் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.