எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் போன்களை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சித்ததாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.


தங்களின் போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பாக எச்சரிக்கை மெயில் அனுப்பியிருப்பதாகக் கூறி, அதன் ஸ்கிரீன் ஷாட்களை அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா மற்றும் சசி தரூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சட்டா, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை மெயில் அனுப்பியதாக மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். ஆனால், இதுதொடர்பாக அவர் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.


எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "எச்சரிக்கை: உங்களின் ஐபோனை அரசு ஹேக் செய்ய முயற்சிக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. threat-notifications@apple.com என்ற முகவரியில் இருந்து இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது.


"உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலைதூரத்தில் இருந்து ஹேக் செய்ய அரசு தரப்பு முயற்சி செய்துள்ளது. தனிப்பட்ட அளவில் உங்களை குறிவைத்து இந்த ஹேக் முயற்சி மேற்கொண்டிருக்கலாம். உங்களின் போனை அரசு தரப்பு ஹேக் செய்யும் பட்சத்தில், அவர்களால் உங்களுடைய முக்கியமான தரவு, தகவல்தொடர்புகள், கேமரா, மைக்ரோஃபோன் ஆகியவற்றை தொலைவிலிருந்து அணுக முடியும். இது தவறான தகவலாக இருக்க வாய்ப்பிருந்தாலும், இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும்" என மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வந்துள்ள எச்சரிக்கை மெயில் குறித்து ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இந்த ஹேக் முயற்சி பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டுள்ளது. நடத்தியவர்கள் அதிநவீனமானவர்கள். அவர்களின் ஹேக் முயற்சிகள் காலப்போக்கில் மாறும் தன்மை கொண்டது. உளவு சிக்னல்களை அடிப்படையாக கொண்டு இந்த ஹேக் முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெருப்பாலான நேரங்களில் இந்த உளவு சிக்னல்கள் முழுமையற்றதாகவும் குறையுள்ளவையாக இருக்கிறது. இந்த எச்சரிக்கை மெயில்கள், தவறானவையாக இருக்கலாம். சில தகவல்கள் கண்டுபிடிக்க முடியாதவையாக உள்ளது. எப்படி ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்களை எங்களால் வெளியிட முடியாது. ஏன் என்றால், எதிர்காலத்தில் அதை பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஹேக் முயற்சி மேற்கொள்ளப்படலாம்" என ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.