இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அடுத்தடுத்து 3 திரைப்படங்களை தயாரிக்கிறது. சிலம்பரசனின் 48வது படத்தை தயாரிக்கிறோம். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.


அதேபோல், கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். மேலும், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். 


உலகநாயகன் கமல்ஹாசனால் தொடங்கப்பட்டது தான் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல். இந்நிறுவனம் திரைப்படம் தயாரிப்பதோடு திரைப்படங்களை வெளியிட்டும் வருகிறது. முதன்முதலில் 1981ஆம் ஆண்டு, ஹாசன் சகோதரர்கள் என்ற பெயருடன் இந்த நிறூவனம் தொடங்கப்பட்டது. இப்பெயருடன் ராஜ பார்வை  தமிழ்த் திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டது. இப்படத்தினை சிங்கீதம் சீனிவாசராவ் என்பவர் இயக்கினார். இப்படத்தில் கமல்ஹாசன், மாதவி நடித்து இருந்தனர். இப்படம் தெலுங்குவில் அமாவாசய சந்துருடு எனும் பெயரில் வெளியிடப்பட்டது.  


அதன் பின்னர் தான் இந்த நிறுவனத்திற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் உள்ளது. வர்த்தக ரீதியாக பெரும் வசூல்களை குவிக்கும் கதைகளை விட, மிகச்சிறந்த திரைப்படமாக உருப்பெரும் என நம்பக்கூடிய திரைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்தது. அந்த வரிசையில், 1986ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம், கடந்த ஆண்டு வெளியாகி உலக சினிமாக்களையே தமிழ் சினிமா பக்கம் பார்க்கவைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய விக்ரம் வரைக்கும் பல்வேறு வெற்றிப் படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தும் வெளியிட்டும் உள்ளது.  


இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் இணைவது இது, இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக மாறிய திரைப்படமான நாயகன் படத்தில் தான் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பின்னர், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்கள் இணைவதால், தமிழ் சினிமா வட்டாரமே படத்தினைப் பற்றி பரபரப்பாக பேசி வருகிறது. அதிலும், குறிப்பாக இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால், ஜாம்பவான்கள் இணையும் இப்படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தினை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னலுடன் உயதநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவீஸும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படம் உலகநாயகன் கமல்ஹாசனின் 234வது படம் என்பதால், கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.