தன்னைப்போன்று வளர்ந்து வரும் நடிகருக்கு உதயநிதியின் பாராட்டு மகிழ்ச்சி தருவதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
லவ்வர்
குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.
படம் பார்த்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
ரொமாண்டிக் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தில் காதலில் ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் மையக்கதையாக உள்ளது. ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபக்காரன் இளைஞனாக மணிகண்டனும் அவரைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவராக அவரது காதலியாக கெளரி பிரியா ரெட்டியும் நடித்துள்ளார்கள். ஆறு வருடங்களாக காதலித்து வரும் இருவருக்கு இடையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் சிக்கல்கள் இந்த ட்ரெய்லரில் காட்டப்படுகின்றன. குட் நைட் படத்தில் ஹோம்லியாக நடித்த மணிகண்டன் இந்தப் படத்தில் கெட்ட வார்த்தை பேசும் கோபக்கார இளைஞனாக நடித்துள்ளார். ஷான் ரோல்டனின் இசையில் இதுவரை ஏழு பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து வெளியாகியுள்ள நிலையில் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசை அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
லவ்வர் படத்தின் ட்ரெய்லரை பார்த்த திரையுலகினர் மணிகண்டனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கவின் , ஹரிஷ் கல்யாண், கலையரசன், ரமேஷ் திலக் , அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் லவ்வர் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து தங்களது பாராட்டுக்களை பதிவு செய்தார்கள்.
இந்நிலையில் லவ்வர் படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் மணிகண்டனுக்கு ஃபோன் செய்து அவரை பாராட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு இந்த பாராட்டு மகிழ்ச்சி தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.