இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. தற்போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் இருந்து வருகிறார்.
திமுக கூட்டணி:
நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை திமுக தலைமை ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து பேசத் தொடங்கி விட்டனர். திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வசம் உள்ளதால் அதனை தக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். திமுக நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அண்மையில் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன்படி, சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகி பி.கே.பாபு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு, வீரபாண்டி ராஜாவின் மகள் மலர்விழி ராஜா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சேலம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் ஏழு முறை சேலம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் நாடாளுமன்ற தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி.தங்கபாலு அல்லது அவரது மகன் கார்த்திக் தங்கபாலுவுக்கு வழங்க வாய்ப்புள்ளது.
அதிமுக கூட்டணி:
அதிமுகவை பொறுத்தவரை சேலம் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் ஆகும். எனவே அதனை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை வென்றது. எனவே சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதிமுகவை பொருத்தவரை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செம்மலைக்கு நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மணியன் உறவினரும், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவத்தின் மகனும், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளருமான விக்னேஷ் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிற கட்சிகள்:
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாமகவில் இணைந்த முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ் அல்லது வன்னியர் சங்க மாநில செயலாளராக உள்ள கார்த்திக் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற வேட்பாளராக வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் புது முகமாக உள்ள இளைஞருக்கு நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர்.