விழுப்புரம்: குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறையின் வாயிலாக செயல்படும் குழந்தைகளுக்கான விடுதிகளில் பதிவு பெறமால் செயல்படும் மாணவ மாணவியரின் விடுதிகள் குறித்த விவரம், குழந்தை தொழிலாளர் துறையின் வாயிலாக குழந்தை தொழிலாளர் உள்ளனரா ஆய்வு மேற்கொண்டு மீட்கப்படுகின்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு குழந்தைகளின் பெயர் பட்டியலினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அளிக்க வேண்டும்.
மேலும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வேண்டி குழந்தை நலக்குழுவில் ஆஜர்ப்படுத்தப்படும் குழந்தைகளில் நிதி ஆதரவு உதவி தொகை தேவைப்படும் குழந்தைகளின் பெயர் பட்டியல் வழங்கிட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்க கூடாது என சுகாதாரத்துறையின் வாயிலாக மருந்து கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி அளித்தல் வேண்டுமென முதன்மை நடுவர் மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆகவே அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக ஒருநாள் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் தங்கி கல்வி கற்பதற்கு அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்ப்பட்டு வருகின்றது.இவ்வில்லத்தில் 98 குழந்தைகள் தங்கி பயில்வதற்கான இடவசதியுள்ளது. ஆகவே கல்வித்துறை மற்றும் இதர துறையினர் வாயிலாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்தால் அக்குழந்தைகளை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்திடும் பொருட்டு, குற்றவழக்குகளை விரைவாக பதிவு செய்யவும், குற்றப்பத்திரிக்கையை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும். இதுமட்டுமல்லாமல், குற்றங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.