தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள தியேட்டர்களில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


வாரிசு பொங்கல்


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.






இந்த படத்தில் இருந்து  கடந்த நவம்பர் 5 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே வெளியானது. விஜய் பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் யூட்யூப்பில் 96 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து 2 ஆம் பாடலாக டிசம்பர் 4 ஆம் தேதி தீ தளபதி பாடல் வெளியானது. பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. 


துணிவு ரிலீஸ்


இதனிடையே பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலாக சில்லா சில்லா பாடல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


வாரிசு vs துணிவு 


முன்னதாக வாரிசு படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனமும், துணிவு படத்தின் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இதனால் வாரிசுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ உதயநிதி ஸ்டாலினை சந்திக்கப் போவதாக தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் வாரிசு படத்தை சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஆற்காடு மாவட்டங்களின் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் படங்களின் விநியோகஸ்தர்களையும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாரிசு படத்துக்காக களமிறங்கியதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.