மனிதன்




அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் மனிதன். பிரகாஷ் ராஜ் , ஹன்சிகா , விவேக் , ஐஸ்வர்யா ராஜேஷ் , ராதா ரவி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்தியில் வெளியான ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானதுதான் மனிதன். மனிதன் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் கடந்துள்ளன.


காமெடி டூ சீரியஸ்




நடிப்பதற்கு தயாரான உதயநிதி ஸ்டாலினை நாயகனாக நம்ப வைப்பதற்கு கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்பட்டது. அதற்குக்தான் இருக்கவே இருக்கே காமெடி சப்ஜெக்ட். ஒரு கல் ஒரு கண்ணாடி , இது கதிர்வேலன் காதல் , நண்பேண்டா போன்ற காமெடி கலந்த படங்களில் நடித்த உதயநிதியால் கொஞ்சம் காலம் தான் மக்களை என்டர்டெயின் செய்ய முடிந்தது.


கொஞ்சம் ரூட்டை மாத்தி ஆக்‌ஷன் பக்கம் வந்து அவர் நடித்த கெத்து படமும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இப்படியான நிலையில் அவருக்கு கைகொடுத்த படம் தான் மனிதன்.


ஆறு பேரை மதுபோதையில் வாகனம் ஏற்றிக் கொன்றதாக குற்றம்சாட்டப்படுகிறார் பிரபல தொழிலதிபரின் மகன். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை நீதிமன்றம் நிரபராதி என்று விடுதலை செய்கிறது. மறுபக்கம் எப்படியாவது ஒரு வழக்கையாவது வாதாடி ஜெயித்து காட்டி தன் முறை பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற கொள்கையுடன் இருக்கிறார் நாயகன் சக்தி ( எப்படியாவது ஒரு சீரியஸான ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கொள்கையுடன் இருபதைப் போல்). புகழ்பெற்ற இந்த வழக்கை எடுத்து வாதாடி ஜெயிக்க நினைக்கிறார் சக்தி. பல்வேறு அவமானங்கள் , உதாசீனங்களைக் கடந்து இந்த வழக்கை நாயகன் சக்தி வென்று காட்டுவதை மிக உணர்வுப்பூர்வமான கதையாக சொல்லியிருப்பார் இயக்குநர் அகமத்.


படத்திற்கு தேவைப்பட்டது ஒரு பலவீனமான நாயகன். அதற்கு எதிராளி பலசாலியாகவும் திறமையானவராகவும் இருக்க வேண்டும் இல்லையா. அதை தான் நெகட்டிவ் ரோலில் நடித்த பிரகாஷ் ராஜ் செய்தார். கதைப்படி ஒரு கட்டத்தில் நாயகனின் மேல் பார்வையாளனுக்கே பரிதாபம் ஏற்படும் அளவிற்கு பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதுதானே கதைக்கு தேவைப்பட்டது. இதனால் எல்லா விதங்களிலும் கதையுடன் பொருந்திப் போனார் நம் புது ஹீரோ.


ரசிகர்களை பொறுமையாக இருக்கவைத்து எதிர்பார்க்காத நேரங்களில் சின்ன சின்ன திருப்பங்களை படத்தில் கையாண்டதே மனிதன் படத்தை ரசிகர் மத்தியில் சக்ஸஸாக மாற்றியது. கூடுதலாக சந்தோஷ் நாராயணின் பாடல்கள் இன்று வரை சோர்வில் இருக்கும் நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்தன. உதயநிதி ஸ்டாலின் அவரது குட்டியான சினிமா கரியரில் குறிப்பிடத் தகுந்த ஒரு படமாக மனிதன் என்றும் இருக்கும்.