இந்தியில் தேசிய விருது பெற்ற ஆர்டிக்கள் 15 என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. இரு பெண்கள் கொலை செய்யப்பட்டு தற்கொலையாக ஜோடிக்கப்பட்ட வழக்கைப் பற்றியது தான் இந்தக் கதை. அதை தமிழில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதைக்களத்தை சிறிது மாற்றி கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டிலை சூட்டி படமாக்கினர்.


2012 ல் ராஜேஷ் இயக்கத்தில் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோ உதயநிதி உருவானார். ‛திமுக ஆட்சியில் தயாரிப்பாளராக இருந்தவர்கள், எங்கள் ஆட்சியில் நடிக்கவும் செய்கிறார்கள்’ என்று அதிமுகவினர் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு, அப்போது அது பார்க்கப்பட்டது.


முதல்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற, உதயநிதி அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன் என , இடைவெளிக்கு இடைவெளி தனது படங்களை அவ்வப்போது இறக்கிக் கொண்டே இருந்தார் உதயநிதி. கடந்த 2020 ல் மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்த சைக்கோ நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின், நீண்ட இடைவெளிக்குப் பின் போனிகபூர் இயக்கத்தில், அருண்குமார் காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 வெளியானது. அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படம் வெளியாவதற்கு முன்னரே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்ப டீசர் காரணமாக இருந்தது. டீசரில் வரும், நடுவுல நிக்கிறது இல்ல சார் நியூட்ரல். நியாயத்து பக்கம் நிக்குறதுதான் நியூட்ரல்” என உதயநிதி பேசும் வசனம், படம் நிச்சயமாக இன்டன்ஸாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.




ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாயமாகிறார்கள். இருவர் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண் , என்ன ஆனார் என தெரியவில்லை. அதை சாதாரண பெட்டி கேஸ் போல, அந்த வழக்கை கையாளும் காவலர்களுக்கு மத்தியில், புதிதாக அங்கு பொறுப்பேற்கும் ஏஎஸ்பி., உதயநிதி, உணர்வோடு அதை விசாரிக்கிறார். தூக்கிலிடப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா? மாயமான பெண் கிடைத்தாரா? என்பது தான், நெஞ்சுக்கு நீதி. 
உதயநிதியின் நடிப்புக்காக நிறைய பேர் வெளிப்படையாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். போலீஸ் மிடுக்கு கொஞ்சமும் குறையாமல், நன்கு தேறியிருக்கிறார் உதயநிதி என்று பாராட்டு பரவலாக முன்வைக்கப்பட்டது. முந்தைய கால அவரது படங்களில் இருந்த பல குறைகள் நீங்கியிருக்கின்றன என்று யூடியூப் விமர்சகர்கள் வரை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். 


சோனி லிவ்வில் ரிலீஸ்: இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சோனி லிவ்வில் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.