திருவல்லிக்கேணி சேப்பாக்கம்  சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டதுமே நடிப்புக்கு முழுக்கு போட இருப்பதை, அவ்வப்போது பேட்டிகளில் பேசி வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றதுமே அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். 


இது குறித்து அவர் பேசும் போது, இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மாமன்னன் படம்தான் தான் நடிக்கும் கடைசிப் படம் எனவும் தெரிவித்துள்ளார். கமல் தயாரிப்பில் தான் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்றும் பேசியிருக்கிறார். அவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  ‘மாமன்னன்’ படம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆகி இருந்தார். தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் திரையுலக வாழ்கையை ஒரு ரீவைண்டாக பார்க்கலாம்.


சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் முதலில் தயாரிப்பாளராகவே என்ட்ரீ ஆனார். விஜய் நடித்த  ‘குருவி’ படம் மூலமாக என்ட்ரீ ஆன உதயநிதி ‘ஆதவன்’ ‘மன்மதன் அம்பு’  ‘7 ஆம் அறிவு’ ‘நீர்பறவை’‘பாஸ் என்ற பாஸ்கரன்’  ‘வணக்கம் சென்னை’ ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களை தயாரித்து இருக்கிறார்.


 முன்னதாக சூர்யா நடித்த ஆதவன் படத்தின் கிளைமேக்ஸில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த உதயநிதி  இயக்குநர்  ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடிகராக அறிமுகமானார். சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்தப்படம் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாக சென்றது. இதனால் அந்தப்படத்தில் நிச்சயம் தனக்கு நஷ்டம் வரும் என எதிர்பார்த்தார் உதயநிதி. ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே மாறி, ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. சரி ஆசைக்கு ஒரு படம் நடித்தாயிற்று இதன் பின்னர் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த உதயநிதி அடுத்த 6 மாதங்களுக்கு மேல் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். 


ஆனால் போகிற இடமெல்லாம், அடுத்த படம் பண்ணவில்லையா என்று கேள்வி எழும்ப சுந்தரபாண்டியன்  பட இயக்குநர் பிரபாகரனுடன் இணைந்து இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார்.  ஓகே ஓகே பாணியிலேயே சந்தானைத்தை துணையாக வைத்துக்கொண்டு நடித்தார் உதயநிதி. ஆனால் இந்தப்படம் தோல்வி படமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து அதே பாணியில் நண்பேண்டா படத்தில் நடித்தார். அந்தப்படமும் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான கெத்து படமும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சற்று நிதானித்த உதயநிதி, ஏற்கனவே சென்று கொண்டிருந்த காமெடி ஜானரை மாற்றி, தனது பாதையை கொஞ்சம் சீரியஸான விஷயங்கள் மீது செலுத்தினார். 




அப்படித்தான்  ‘மனிதன்’ படம் உருவானது. ஒரு இளம் வக்கீல் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்து அதில் எவ்வாறு வெல்கிறான் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இந்தப்படத்தில் நடிப்பில் கொஞ்சம் தேறி, நல்ல நடிப்பை கொடுத்து பாராட்டுகளை பெற்றார். இதைத்தொடர்ந்து குடும்பக்கதைகளுக்கு பேர் போன இயக்குநர் எழிலுடன் இணைந்தார். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து வந்த பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், பிரியதர்ஷனின் நிமிர், சீனுராமசாமியின்   ‘ கண்ணே கலைமானே’ உள்ளிட்ட படங்கள் உதயநிதியின் தோல்வி பட பட்டியலில் இணைந்து கொண்டது. இதனைத்தொடர்ந்துதான் இயக்குநர் மிஷ்கினுடன்  ‘சைக்கோ’ படத்தில் இணைந்தார். பார்வை இல்லா மாற்றுத்திறனாளியாக அவர் ஏற்று நடித்திருந்த அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, திரைவட்டாரத்திலும் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தது. 


ஆட்சிக்கு வந்ததுமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அதிக படங்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தது. அரண்மனை 3, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன், லவ் டுடே, சர்தார், டான், பீஸ்ட் என டாப் ஹீரோக்களின் திரைப்படங்களும் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமே வெளியிட்டது. மேலும் இனி வெளியாக இருக்கும் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, துணிவு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையும் உதயநிதியின் ரெட் ஜாயிண்ட் நிறுவனமே கைப்பற்றியுள்ளது.




இந்த ஆண்டு அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதியும், மகிழ்திருமேனி இயக்கத்தில் 'கலகத்தலைவன்' திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சங்களை பெற்றது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் கம்மிட் ஆனார். இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்றுக்கொண்டார். மாமன்னன் படம்தான் தான் நடிக்கும் கடைசிப் படம் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முதன் முதலாக விளையாட்டாக ஆதவன் படத்தில் நடிக்க ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சாதனையை பொறுத்திருந்து பார்ப்போம்...