உலக சினிமா கண்ட பல தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் அடுத்த படைப்பு குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அவர் இணைந்திருக்கும் இப்படத்திற்கு 'ஓபன் ஹெய்மர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்தப்படம் ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  உருவாக்கப்பட்டு வருகிறது. 


 



 


ஓபன் ஹெய்மர் வாழ்க்கை வரலாறு படமாகிறது :


சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.


"அணுகுண்டின் தந்தை" என அழைக்கப்படும் ஓபன் ஹெய்மர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் ஓபன் ஹெய்மராக சில்லியன் மர்பி நடிக்கிறார். அமெரிக்கன் ப்ரோமிதியஸ்: தி ட்ரையம்ப் அண்ட் டிராஜடி ஆஃப் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர் எனும் புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆறாவது முறையாக சில்லியன் மர்பி - கிறிஸ்டோபர் நோலன் கூட்டணி மீண்டும்  இணைகிறது. மேலும் இப்படத்தில் மாட் டாமன், எமிலி பிளண்ட், ராபர்ட் டவுனி ஜூனியர், ஃப்ளோரன்ஸ் பக் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். 


 






 


அடுத்த ஆண்டு ரிலீஸ் :


அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட  திட்டமிட்டுள்ளது யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம். கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் இப்படத்தை முதல் முறையாக விநியோகம் செய்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வரும் இப்படம் IMAX, 70mm & 35mm என திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


 






 


சவாலை எதிர்கொள்ளும் நோலன் :


சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் ஒரு பேட்டியில் பங்கேற்ற போது இப்படத்திற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் டிரினிட்டி அணுகுண்டு சோதனையை உருவாக்குவது மிக பெரிய சவாலாக இருந்தது என்றார். மேலும் ஓபன் ஹெய்மர் படத்திற்காக மாதிரி அணுகுண்டு சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நோலன். VFX மேற்பார்வையாளரான ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.