தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தின் வாரிசாக இருப்பினும் மிகவும் எளிமையான ஒரு மனிதராக மக்கள் மத்தியில் ஒளிரும் ஒரு கழகத் தலைவன் உதயநிதி ஸ்டாலின். 


இப்படி பட்ட ஒரு பின்புலம் இருப்பினும் அரசியல் என்ற வட்டத்திற்குள் நுழையாமல் தமிழ் மக்கள் மத்தியில் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் என்ற பேனரின் கீழ் தயாரிப்பாளராக பிரபலமானார். அவரின் முதல் தயாரிப்பாக விஜய் நடித்த ‘குருவி’ படம் இருந்தது. மறுபுறம் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் சூர்யாவின் 'ஆதவன்' படத்தில் கெஸ்ட் ரோலில் முகம் காட்டியவரை ஹீரோவாக்கினார் இயக்குநர் ராஜேஷ்.


11 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தவருக்கு முதல் படம் ஒரு ஹிட் படமாக அமைந்ததை உதயநிதி கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நடிகராக உதயநிதிக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். விநியோகஸ்தராக இருந்து ஏராளமான படங்களை தமிழகமெங்கும் வெளியிடும் மிகவும் முக்கியமான விநியோகஸ்தராக இருந்து வருகிறார்.  


 



 


ரொமான்டிக் ஹீரோ:


ரொமான்டிக் ஹீரோவாக இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா போன்ற படமாக இருந்தாலும் சரி சமூக அக்கறை கொண்ட நெஞ்சுக்கு நீதி , கழகத் தலைவன், இப்படை வெல்லும், கண்ணை நம்பாதே, நிமிர், சைக்கோ, கண்ணே கலைமானே போன்ற படங்களாக இருப்பினும்  தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் ஒரு நிலையான இடத்தை உதயநிதி பிடித்தார்.  சமூக பிரச்சனைகளை அலசும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சமூகம் மீது இருக்கும் அக்கறையை  வெளிப்படுத்தி அதன் மூலம் அவரின் அரசியல் பயணத்தையும் தொடங்கினார். அவர் இத்தகைய கதைகளில் நடித்தது என்பது ரசிகர்களே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. 


அரசியல் பிரவேசம் :


திரை பயணத்தோடு சேர்ந்து அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிய உதயநிதி ஸ்டாலின்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவின் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நடிக்கும் படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' திரைப்படம். அவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை 'பரியேறும் பெருமாள்' படம் வெளியானது முதல் இருந்து வந்ததாக குறிப்பிடிருந்தார். . உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படமான 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 


இயக்குநர்களின் ஃபேவரட் : 


அரசியல் குடும்பத்தின் வாரிசு என்ற பில்ட் அப் சிறிதும் இல்லாமல் மிகவும் ஒரு சாதாரண மனிதராக இயக்குநரின் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத ஒரு யதார்த்தமான மனிதராக இருந்ததால் பல இயக்குநர்களின் ஃபேவரைட் உதயநிதி ஸ்டாலின். அவரின் திரைப்பயணம் ஒரு இனிய பயணமாக அமைந்தது. ஒரு நடிகராக மக்களின் மனதை வென்றவர் நிச்சயமாக ஒரு பொறுப்பான அரசியல் தலைவராக சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.