தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். பின்னர், நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு அவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். பின்னர், மகளிர் மட்டும், தம்பி என கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமாருடன் இணைந்து உடன்பிறப்பே படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு நடிகை ஜோதிகா கோவில்களுக்கு அளிக்கப்படும் நிதி குறித்தும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் நிலைகள் குறித்தும் பேசினார். அவரது பேச்சுக்கு அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், உடன்பிறப்பே படத்தின் இயக்குனர் இரா.சரவணன் நடிகை ஜோதிகா ஏன் அவ்வாறு பேசினார் என்று வார இதழ் ஒன்றுக்கு பேசியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், உடன்பிறப்பே படப்பிடிப்பிற்காக தஞ்சை சென்ற ஜோதிகா, தஞ்சையில் உள்ள ராஜா மிராசுதாரர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அப்போது கர்ப்பிணி பெண்கள், கையில் குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் நீண்ட வரிசையில் அங்கே காத்திருப்பதை கண்டார். பிரசவம் முடிந்த அடுத்த நாளே பிறந்த குழந்தையுடன், ஒரு பெண் தரையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அரசு மருத்துவமனைகளின் இந்த நிலையைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்த அவர் வெறுமனே பேசுவதுடன் நிறுத்தாமல், மருத்துவமனையில் தேவையான வசதிகளை செய்ய ரூபாய் 25 லட்சத்தை நன்கொடையாக அளித்தார். ஜோதிகாவின் பேச்சு வைரலான பிறகுதான் மருத்துவமனையை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. மருத்துவமனையை சுற்றி கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, புதர் மண்டிக்கிடந்த பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் நேரில் சென்று சீரமைப்பு பணிகளில் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டார். மருத்துவமனையை சுத்தம் செய்தபோது அங்கு 12க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டது. இந்த அனைத்து நல்ல மாற்றங்களும் ஜோதிகாவின் பேச்சால்தான் நடந்துள்ளது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவின் கணவர் சூர்யா நடிகராக மட்டுமின்றி சமூக ஆர்வலராக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். அவர் தனது அகரம் அறக்கட்டளை சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி செலவை ஏற்று படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது