சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கதாநாயகன் (விஜய்) நேற்று தான் கட்சி ஆரம்பித்தார். உறுப்பினர் பதிவு என ஏதோ சொன்னார். ஆன்லைன் மூலம் உறுப்பினராகலாம் என கூறினார். கூகுளில் பிளாக் ஆகிட்டு என சொல்கிறார்கள்.காலையில் நியூஸ் பேப்பரை திறந்து பார்த்தால் விஜய் தொடங்கி அடுத்த சில நிமிடங்களில் 20 லட்சம் பேர் சேர்ந்தார்கள் என இருந்தது. இன்னொரு யூட்யூப் சேனலில் 50 லட்சம் பேர் என சொல்கிறார்கள்.
40 ஆண்டுகாலம் ஒரு பொது வாழ்க்கைக்கு என்னை அர்ப்பணித்து விட்டிருக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள திருமாவளவன் உள்ளிட்ட மக்களுக்காக உழைக்கின்ற எண்ணற்ற தியாகிகளை இந்த தமிழ் சமூகத்தின் இளைய கூட்டம் தூக்கி எறிந்துவிட்டு இன்றைக்கு கூத்தாடிகளை கொண்டாடுகிறது. இந்த நிலை உடைக்கப்பட வேண்டும். இன்னைக்கு நான் பேசிட்டு இந்த கூட்டத்தில் இருந்து வெளியே சென்றால் விஜய் ரசிகர்கள் கல்லால் அடித்தால் கூட கேட்பதற்கு ஆட்கள் கிடையாது.
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என வெறிகொண்ட ரசிகர்கள் இருந்தபோது ஒரு கட்டத்தில் பிரச்சினை வந்தபோது அடங்கினார்கள். பாபா பட பெட்டி என்னுடைய முந்திரி காட்டில் தான் இருந்தது. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரையும் எதிர்த்து தான் அரசியல் களத்தில் 43 ஆண்டுகாலம் நிற்கிறேன்” என தெரிவித்தார். வேல்முருகனின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியையும் அவர் அறிமுகம் செய்தார்.இதன்மூலம் 3 நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இது ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட நெடும் காலமாக அரசியலில் இருக்கும் கட்சிகள் விஜய்க்கு கிடைத்திருக்கும் ஆதரவைப் பார்த்து சற்றே கதிகலங்கியுள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தான். அதாவது தமிழக வாழ்வுரிமை கட்சி ஆங்கிலத்தில் TVK என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. விஜய்யின் கட்சி பெயரும் TVK அப்படியே குறிப்பிடப்படுவதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.