Karan Adani: லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 3 மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


லக்னோ விமான நிலையம் திறப்பு:


உத்தரப் பிரதேசத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக, லக்னோ விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த டெர்மினல் 3 (டி3) ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன டெர்மினல், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான சேவைகளை செய்யும், பீக் ஹவர்ஸில் ஒரே நேரத்தில் 4,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இந்த முனையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிர்வாக இயக்குநர் (MD) கரண் அதானி பேசுகையில், சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் (CCSIA) டெர்மினல் 3 திறப்பு விழா ஒரு வரலாற்று தருணம் என்றார்.


”உத்தரபிரதேசத்தின் நுழைவுவாயிலாகும் லக்னோ விமான நிலையம்”


தொடர்ந்து பேசுகையில், “சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் எங்கள் பார்வை பெரியது மற்றும் தொலைநோக்கு கொண்டது. 2047-48 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 3 கோடியே 80 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலையத்தின் திறனை விரிவுபடுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு.  இந்த அதிவேக வளர்ச்சியானது உத்தரப் பிரதேசத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை,  ஆதரிப்பதற்கான எங்களின் மூலோபாயத்தின் அடித்தளமாகும்.  இன்று நாங்கள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளோம். இந்த புதிய முனையமானது லக்னோ விமான நிலையத்தை, உத்தரபிரதேசத்தின் நுழைவுவாயிலாக மாற்றும். முதற்கட்டத்தில் இது ஆண்டுக்கு 80 லட்சம் பயணிகளை கையாளும், இரண்டாம் கட்ட பணிகள் முடிவடையும் போது இந்த முனையம் ஆண்டுக்கு 1 கோடியே 30 லட்சம் பயணிகளை கையாளும். 


”கலாச்சாரத்தை கொண்டாடும் கட்டுமானம்


டெர்மினல் T3 ஐ வேறுபடுத்துவது அதன் அளவு அல்லது அதன் வசதிகளின் நுட்பம் மட்டுமல்ல. உத்திரபிரதேசத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை அதன் வடிவமைப்பில்  இதயமும் ஆன்மாவுமாக சேர்த்துள்ளோம். ஸ்வாகத் சுவருடன் பயணிகள் வரவேற்கப்படுகின்றனர். அதில் லக்னோவின் வானியல் அழகு, உத்தரபிரதேசத்தில் உள்ள தொடர்ச்சியான மலைகள் மற்றும் புதுமையான மலர் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 


நாங்கள் உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்கவில்லை. 13,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறோம். இதனால் பிராந்திய மற்றும் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறோம். சுற்றுச்சூழலின் இயற்கை அழகை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க நமது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன” என கரண் அதானி தெரிவித்தார்.