தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு  ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். 


நடிகர் சங்கம்:



தென் இந்திய  நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு ரூபாய் 40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தென் இந்திய திரைப் பிரபலங்கள் தங்கள் பங்குக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டப் பணிகளுக்கு ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாலர் கார்த்தி உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  நடிகர் சங்கக் கட்டடத்திற்கு  ரூபாய் ஒரு கோடி வழங்கினார். 


விஜய் 1 கோடி ரூபாய் நிதி:


இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளார். 


தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ள நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார். 


 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.  


தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி, “ நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.


சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என இடம் பெற்றுள்ளது.