பா.ஜ.க-வின் வெற்றிக்கு ’அணில்’ போல இருப்போம்  என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளார் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். 


எதிர்வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. போட்டியிட உள்ளதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் தெரிவிக்கையில்,” கூட்டணி தொடர்பான பா.ஜ.க. உடன் பேசி வருகிறோம். அவர்களுக்கு எங்களின் நிபந்தனையற்ற ஆதரவு தொடரும். தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. எங்களை வலியுறுத்தவில்லை. எங்களின் தேவைகள் பா.ஜ.க.விற்கு தெரியும். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.


மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. கட்சிகள் தங்களது கூட்டணி தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் த.ம.க., ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில், அ.ம.மு.க.வும் பா.ஜ.க.-விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 


இந்நிலையில்,” பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.ம.மு.க. அளிக்கும். எங்களது கோரிக்கைகளை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டோம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம்.”எனத் தெரிவித்துள்ளார்.


இளைஞர்களின் வாழ்க்கை சீரழியும் அளவிற்கு போதைப்பொருள் கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளது. ஆகையால் திமுக அரசை கண்டித்து  அ.ம.மு.க. சார்பில் இன்று (11.03.2024) திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து பேசிய அவர், ”இது நாள் வரை வருகின்ற தேர்தலில் அமமுக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து வந்தோம். இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவுடன் கூட்டணியில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சேர்ந்துள்ளோம். இன்று (11.03.2024) காலை தொலைபேசி மூலமாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் என அழைத்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் கடிதம் மூலமாக ஏற்கனவே பாஜக முக்கிய நிர்வாகிகள் இடம் கொடுத்துள்ளோம். ஆகையால் அடுத்த அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் எத்தனை தொகுதிகள், எந்த எந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்படும். நான் இந்த தேர்தலில் போட்டியிடலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களைப் பொறுத்தவரை இந்திய மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தக்கூடிய பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” என்று தெரிவித்தார்.


”இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான கட்சி பாஜக, மீண்டும் பிரதமராக மோடி அவர்கள் வரவேண்டும் என்பதை எங்களுடைய நிலைப்பாடு. பாஜக - அமமுக கூட்டணியில் எந்த எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, யார் வேட்பாளர் என்பதெல்லாம் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.