நடிகை துனிஷா ஷர்மா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' போன்றவற்றில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இணையதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது; மேலும் அது தொடர்பாக பல வதந்திகளும் பரவி வந்தன. 

நடிகை துனிஷா ஷர்மா கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக பல வதந்திகள் பரவின. ஆனால், துனிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்  நடிகை துனிஷா ஷர்மா, கர்ப்பமாக இல்லை என்றும்,  மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக நடிகரான ஷீசன்னும் காதலித்து வந்த நிலையில் காதல் முறிவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

துனிஷா சர்மா - ஷீசன் முகமது இருவரும் 15 நாட்களுக்கு முன் பிரிந்துள்ளனர். ஷீசன் முகமது பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இதை தெரிந்து கொண்ட துனிஷா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக  துனிஷாவின் மாமா பவான் சர்மா (Pawan Sharma) குற்றம்சாட்டியுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், துனிஷா தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தார். இது ரசிகர்களால் பகிரப்பட்டும் வருகிறது. “ஏதொ ஒன்றை தீவிரமாக நேசிப்பவர்கள், அதனால் ஊக்கத்துடன் செயல்படுபவர்கள் எப்போதும் ஓய மாட்டார்கள்.” என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

துனிஷாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையினர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார் துனிஷாவின் மாமா பவான் சர்மா.