Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது.
இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை சந்தித்த TTF வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் TTF வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட நிகழ்வில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடந்தது என்ன?
கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள சினிமா அலுவலகம் ஒன்றை திறந்த வைக்க இன்று பிற்பகல் 2 மணி அளவில் TTF வாசன் அங்கு வந்தார். அவர் வருவதை முன்னமே தெரிந்து கொண்ட அவரது ஃபாலோயர்கள் அங்கு பைக்குகளில் வந்து அதிக சத்தத்துடன் ஹாரனை எழுப்பினர். தொடர்ந்து அங்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தெருக்களில் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக கூட்டம் கூட்டியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.