நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதைப்போல் 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல்லம் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் வீரன்
கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரு.வி.க பூங்கா என்ற படத்தை இயக்கி நடித்தவர் செல்அம். இவர் தற்போது யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை விமரிசையாக நடைபெற்ற நிலையில் ஷூட்டிங் போகலாம் என நினைத்த நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விபத்தில் டிடிஎஃப் வாசன் சிறை சென்றார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாத சிறைவாசத்துக்குப் பின் டிடிஎஃப் வாசன் ஜாமினில் வெளியே வந்தார். இப்படியான நிலையில் இந்த சம்பவத்தால் மஞ்சள் வீரன் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படத்தில் டி.டி.எஃப் வாசன், கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் செல்அம் மஞ்சள் வீரன் படத்தின் மிகப்பெரிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியதைப்போல் தானும் 12-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்..
தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
"சிறந்த மதிப்பெண் எடுத்தவர்களை எல்லாரும் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாம் ஊக்கப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கப்போகிறார்கள்.
ஆனால் தோல்வி அடைந்தவர்களை ஊக்கப்படுத்தத்தான் இங்கு ஆள் இல்லை. நான் எடுத்த முதல் படம் திரு.வி.க பூங்கா தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்குப் பிறகு என்னையே சுமக்க முடியாத நிலையில்தான் நான் இருந்தேன் அதை எல்லாம் கடந்து இப்போது மஞ்சள் வீரன் படம் எனக்கு கிடைத்திருக்கிறது.
இதனால் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நான் ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்திருக்கிறேன்.
மஞ்சள் வீரன் படத்தின் மிகப்பெரிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. பிளாஷ் நியூஸ் வரும் அளவிற்கு இந்த அப்டேட் பெரிதாக இருக்கும் " என்று அவர் கூறியுள்ளார்.