IPL 2024 Flop Players: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் மற்றும் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் ரசிகர்களை ஏமாற்றினர்.


ஐபிஎல் 2024 - சொதப்பிய நட்சத்திர வீரர்கள்:


இந்தியன் பிரீமியர் லீக்கின் மற்றொரு பரபரப்பான சிசன் மிகுந்த உற்சாகத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. இதனிடையே, மற்ற அணிகள் கோப்பயை வெல்லாவிட்டாலும், அதில் இருந்த நட்சத்திர வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தனர். அதேநேரம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில நட்சத்திர வீரர்கள், மோசமான ஃபார்மால் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தனர். அந்த வகையில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நட்சத்திர வீரர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர். 


டேவிட் வார்னர்: 


2009ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான பிறகு, டேவிட் வார்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு சீசனிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இந்த சீசனில் அவர் அந்த வாய்ப்பை இழந்தார் டெல்லி அணிக்காக 8 போட்டிகளில் களமிறங்கி, 168 ரன்கள் மட்டுமே சேர்த்தார். தொடக்கத்தில் டெல்லி அணி தொடர் தோல்விகளால் துவண்டபோது, தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய டேவிட் வார்னர் எந்த ஒரு பெரிய இன்னிங்ஸையும் வெளிப்படுத்தவில்லை. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்ததே வார்னரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.


அஜிங்க்யா ரகானே: 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரகானே 13 போட்டிகளில்,  242 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. முக்கியமான சூழலில் விக்கெட்டை கூட தக்கவைத்து விளையாடவில்லை. இதனால் அவரது ஐபிஎல் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


தேவ்தத் படிக்கல்:


தேவ்தத் படிக்கல்லுக்கு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு ஆண்டுகள் சிறப்பாக அமைந்தது. ஆனால் கடந்த 2022 முதல் தடுமாறி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5.43 சராசரியுடன் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, 19 பந்துகளில் 13 ரன்கள் குவித்தே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.  


கிளென் மேக்ஸ்வெல்:


கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் இந்த சீசன் ஏமாற்றமாகவே அமைந்தது. சீசன் முழுவதும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் போராடினார். மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி 5.78 என்ற மோசமான சராசரியுடன் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக, 28 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த 10 போட்டிகளில் 8.06 என்ற எகானமியுடன் 6 விக்கெட்டுகளை மட்டுமே விழ்த்தினார். 


ஹர்திக் பாண்ட்யா:


நடப்பு தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஹர்திக் பாண்ட்யா முதன்மையானவராக இருந்தார். குஜராத் அணியில் இருந்து விலகி மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கிய அவர், 14 போட்டிகளில் 18.00 சராசரியுடன் 216 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.  அவரது அதிகபட்ச ஸ்கோர் 45 மட்டுமே. பந்துவீச்சில் 10.75 என்ற எகானமி ரேட்டுடன் வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 


ஜிதேஷ் சர்மா(WK):


விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ஜிதேஷ் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 13 கேட்சுகள் பிடித்தாலும், சர்மாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. 17.00 என்ற சராசரியில் 187 ரன்கள் மட்டுமே சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 32* ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். மற்ற விக்கெட் கீப்பர்-பேட்டர்களுடன் ஒப்பிடும்போது, ​​சர்மாவின் ஆட்டம் ஏமாற்றமாக இருந்தது. 


க்ருணால் பாண்ட்யா: 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்ட்யா, 14 போட்டிகளில் 33.25 சராசரியுடன் 133 ரன்கள் மட்டுமே எடுத்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தது, இந்த சீசனில் அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பந்துவீச்சிலும் வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. அவரது மோசமான செயல்பாடு அணியையே பாதித்தது.


சாம் கரன்:


இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன் நடப்பு சீசன் முழுவதும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மோசமான ஃபார்மையே கொண்டிருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 270 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் 16 விக்கெட்டுகளை எடுத்தாலும், அவரது எகானமி ரேட் 10.15 ஆக இருந்தது.


ஆண்ரிச் நோர்ட்ஜே:


பந்துவீச்சு பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நோர்ட்ஜே, மோசமான ஃபார்மால் ஏமாற்றமளித்தார். 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார், ஆனால் அவரது எகானமி ரேட் 13.36 என மிக மோசமான நிலையில் உள்ளது.


ஷர்துல் தாக்கூர்:


ஷர்துல் தாக்கூர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 9.76 என்ற எகானமி ரேட்டுடன் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். ஒரு போட்டியில் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்ததே அவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது.


அல்சாரி ஜோசப்:


பெங்களூர் அணியால் வாங்கப்பட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்.  ஆனால் அவர் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தார்.  மூன்று போட்டிகளில் களமிறங்கிய அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து, 11.90 என்ற எகானமி ரேட்டில் ரன்களை  வாரி வழங்கினார்.