IPL 2024 Awards: இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனின் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கெத்து காட்டியுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.


ஐபில் 2024 சீசனில் சில இளம் வீரர்கள் அதிக ரன்களை குவித்தும், அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளனர். மேலும், இந்த சீசனில் விராட் கோலி, ஹர்ஷல் படேல், சுனில் நரைன் உள்ளிட்ட பல அனுபவ வீரர்களும் விருதுகளை வென்றுள்ளனர். எனவே ஐபிஎல் 2024 விருது வழங்கும் விழாவில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த விருதுகளை வென்றார்கள் என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள். 


வென்ற அணிக்கு ரூ. 20 கோடி:


ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் ஆனதற்காக ரூ.20 கோடி பரிசுத் தொகையைப் பெற்றுள்ளது.


ரன்னர்-அப் அணிக்கு எவ்வளவு பணம்..?


 ஐபிஎல் 2024 ரன்னர்-அப் அணியாக இரண்டாவது இடத்தை பிடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இது சீசன் முழுவதும் ஹைதராபாத் அணி தனது பெயரில் பல பெரிய சாதனைகளை படைத்தது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததற்காக 12.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


சீசனின் வளர்ந்து வரும் வீரர்:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 21 வயதான ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி ஐபிஎல் 2024ன் சீசனின் வளர்ந்து வரும் வீரர் விருதைப் பெற்றுள்ளார். நிதீஷ் ரெட்டி இந்த சீசனில் 13 போட்டிகளில் 33.67 சராசரியில் 303 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், பந்துவீச்சிலும் இந்த சீசனில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். நிதிஷ் தனது முதல் சீசனிலேயே பல பெரிய சாதனைகளை செய்துள்ள நிலையில், வளர்ந்து வரும் வீரர் விருதுடன் ரூ.10 லட்சத்தையும் பெற்று கொண்டார். 


ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன்:


ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் விருதை 22 வயதான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் பெற்று கொண்டார்.  ஐபிஎல் 2024ல் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்குர்க், 234  ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். இதற்காக, இவருக்கு ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் விருதுடன் ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டது. 


ஃபேண்டஸி ப்ளேயர் ஆஃப் தி சீசன்:


ஃபேண்டஸி ப்ளேயர் ஆஃப் தி சீசன் விருது கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரைனுக்கு வழங்கப்பட்டது. இதற்காக இவர் ரூ.10 லட்சம் பெற்றார். ஃபேன்டஸி கிரிக்கெட் கேம்களில் விளையாடுவதுபோல் இந்த சீசன் முழுவதும் சுனில் நரைன் விளையாடி அனைவரையும் கவர்ந்தார். சிறப்பான பந்துவீசியது மட்டுமல்லாது இந்த சீசன் முழுவதும் நரைன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்.


சீசனின் சூப்பர் சிக்ஸர்கள்:


ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார்.  இந்த சீசனில் அபிஷேக் 42 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில், அவருக்கு ஃபேண்டஸி சூப்பர் சிக்ஸ் ஆஃப் சீசன் விருது வழங்கப்பட்டது. மேலும், ரூ. 10 லட்சத்தையும் பரிசுத்தொகையாக பெற்று கொண்டார். 


ஆன் தி கோ, ஃபோர்ஸ் ஆஃப் தி சீசன்:


இந்த சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்ததற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், ரூ. 10 லட்சத்துடன் ஆன் தி கோ ஃபோர்ஸ் ஆஃப் தி சீசன் விருது பெற்று கொண்டார். இந்த சீசனில் ஹெட் மொத்தம் 64 பவுண்டரிகளை அடித்திருந்தார். 


கேட்ச் ஆஃப் தி சீசன்:


கேட்ச் ஆஃப் தி சீசன் விருதை கொல்கத்தா அணியின் ரமன்தீப் சிங் பெற்றுகொண்டார். இவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்னிஷ் குல்கர்னியின் கேட்சை ரமன்தீப் தாவி அட்டகாசமாக பிடித்தார். இதற்காகவே, இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது. 


மிகவும் மதிப்புமிக்க வீரர்:


 ஐபிஎல் 2024ல் சுனில் நரைன் மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீசன் தொடங்கியதில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக நரைன் திகழ்ந்து வந்தார். நரைன் தனது பேட்டிங் மூலம் 488 ரன்களையும், பந்துவீச்சு மூலம் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் காரணமாகவே சுனில் நரைனுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதுடன், ரூ.10 லட்சம் தொகையும் வழங்கப்பட்டது.


ஆரஞ்சு கேப்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அதிக ரன்கள் எடுத்தவருக்கான ஆரஞ்சு கேப்பை வென்றார். ஐபிஎல் 2024ல் 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 61.75 சராசரியில் 741 ரன்கள் குவித்துள்ளார். 


பர்பிள் கேப்:


இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஹர்ஷல் படேல் பர்பிள் கேப் மற்றும் ரூ.10 லட்சத்தை பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்ஷல் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.