பிரபல நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் நடைபெற்றதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. 


மறக்க முடியாத மலர் டீச்சர்


நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதற்கு முன்னால் 2005 ஆம் ஆண்டு கஸ்தூரி மான் மற்றும் 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதற்கிடையில் பிரேமம் படத்தில் அவர் ஏற்று நடித்த மலர் டீச்சர் கேரக்டர் பல இளைஞர்களின் பேவரைட் ஆக இன்றளவும் உள்ளது. ரசிகர்களும் சரி, திரையுலக பிரபலங்களும் சரி சாய் பல்லவி எங்கு சென்றாலும் அவரை ‘மலர் டீச்சர்’ என்றே அழைத்து வருகின்றனர். 




மேலும் அவர் சினிமாவைப் பொறுத்தவரை முக லட்சணம் சார்ந்த பெண்களை மட்டுமே கொண்டாடப்படுவார்கள் என்ற விதியை உடைத்தார். நம்மை சுற்றி இருக்கும் பெண்களைப் போல பருக்கள் நிரம்பிய இயல்பான முகத்துடன் அறிமுகமாகி பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக வலம் வருகிறார்.  இப்படியான நிலையில் 2018 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படம் தான் சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாகும். இந்த படத்தில் அராத்து ஆனந்தியாக ஆர்ப்பாட்டமாக நடித்திருப்பார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் யூட்யூப்பில் அதிகம் ஹிட் அடித்த பாடல்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. 


பலமொழி படங்களில் பிஸி 


இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தியா, என்.ஜி.கே., கார்கி, பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் சாய் பல்லவி பிஸியாக உள்ளார். 


சாய் பல்லவி கல்யாணம்?


இந்நிலையில் சாய் பல்லவி திருமணம் செய்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியானது. என்ன, ஏதேன்று தெரியாமல் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சாய் பல்லவி மாலையுடன் இருக்கும் போட்டோ கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான பூஜையின் போது எடுக்கப்பட்டிருந்தது. அதில் சாய் பல்லவியுடன் இருப்பது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.


இப்படி உண்மை என்னவென்று தெரியாமல் தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.