தனது 20 ஆண்டு கால திரைப் பயணத்தை கொண்டாடித் தீர்த்த ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போன த்ரிஷா ட்விட்டரில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.


கோலிவுட்டில் தொடங்கி தெலுங்கு, கன்னடம், இந்தி சினிமா வரை தன் க்யூட் புன்னகையால் கட்டிப்போட்ட நடிகை த்ரிஷா 20 ஆண்டு கால திரைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த த்ரிஷா, 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றதுடன், மாடலிங் உலகில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து ஜோடி படத்தில் மிகச்சிறிய துணை கதாபாத்திரமாக எட்டிப்பார்த்த த்ரிஷா, 2002ஆம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ படம் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார்.


தொடர்ந்து சாமி, கில்லி படங்கள் அவருக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்த நிலையில், டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த த்ரிஷாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


2004ஆம் ஆண்டு நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக நடித்த ‘வர்ஷம்’ படத்தில் அறிமுகமான த்ரிஷா அதிரடியாய் தெலுங்கு சினிமாவை ஆக்கிரமித்தார். கோலிவுட், டோலிவுட்டில் கோலோச்சத் தொடங்கிய த்ரிஷா, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து தன் ரசிகர் பட்டாள எல்லையை விரிவாக்கினார்.


தொடர்ந்து பப்ளி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தே நடித்து வந்த த்ரிஷாவின் திரை வாழ்வு 2013 - 14 ஆண்டுகளில் சிறிதே ஆட்டம் காணத் தொடங்கியது.


மேலும் தனிப்பட்ட வாழ்விலும் பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின் மனக்கசப்பு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.


ஆனால் இவற்றுக்கெல்லாம் சோர்ந்து போகாத த்ரிஷா தொடர்ந்து கதாபாத்திர முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கி அப்ளாஸ் அள்ளினார்.


தமிழ் சினிமாவில் பொதுவாக 10 ஆண்டுகளைக் கடந்தாலே மார்க்கெட் வீழும் சூழல் நிலவி வந்த நிலையில், 96 படம் மூலம் தனது ஜானு கதாபாத்திரத்தால் அதனை சுக்குநூறாக உடைத்தார் த்ரிஷா.


அதனைத் தொடர்ந்து பேட்ட, பொன்னியின் செல்வன் என உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர் எனக் கலக்கி வரும் த்ரிஷா தமிழ் சினிமாவில் நேற்றுடன் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார்.


நேற்றைய நாள், த்ரிஷாவின் இந்த 20 ஆண்டு பயணத்தை காமன் டிபி மாற்றி சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.


இந்நிலையில் தன் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போன த்ரிஷா, தன் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


”அன்புள்ள த்ரிஷியன்களே... நான் உங்களில் அங்கம் வகிப்ப்பதற்கும், நீங்கள் என்னில் பாதியாக அங்கம் வகிப்பதற்கும் நான் பெருமைப்படுகிறேன்.


 






நம்முடைய வருங்கால பயணத்துக்கு வாழ்த்துகள். உங்களது இன்றைய செயல் மற்றும் அன்றாட அனைத்து செயல்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.