பிரதமர் மோடி மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என்று அரவிந்தர் நினைவு தபால் தலை, ரூ.150 நாணயத்தை வெளியீட்டு விழாவில் கூறினார்.
மகான் அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது தபால் தலை வெளியீடு, அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 நாணயம் வெளியீட்டு விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மத்திய மந்திரி கிஷண் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காணொலி காட்சி மூலமாக தபால் தலையை வெளியிட்டு, அரவிந்தரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
இந்திய தேசத்தில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இந்த தினத்தை கருதுகிறேன். புதுச்சேரி மண்ணில் குறிப்பாக அரவிந்தரின் நினைவை போற்றுகின்ற வகையில் அவரது நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை கொடுக்கும். மகான் அரவிந்தரின் யோகாசனம் என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும். நாட்டில் பல அவதார புருஷர்கள் இருந்தனர். அந்த வகையில் சுவாமி விவேகானந்தர், மகான் அரவிந்தர், மகாத்மா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் 1893ம் ஆண்டிற்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த ஆண்டில் தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று சாதனை படைத்தார். இதேபோல் மகாத்மா காந்தி தென்ஆப்ரிக்காவுக்கு சென்று சாதனை படைத்தார். அரவிந்தர் இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பினார். இந்த வகையில் 1893-ம் ஆண்டு என்பது 3 பேருக்கும் ஒரு பொருத்தமான ஆண்டாக அமைந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் இதே போன்று பல சாதனைகள் படைத்துள்ளார்.
தேசபக்தி
அரவிந்தர் தனது நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு தேசபக்தியை உருவாக்கினார். அவர் வங்காளத்தில் பிறந்தாலும் கூட குஜராத்தி, வங்காள மொழியை நன்கு கற்றார். இதுபோன்று பல மொழிகளை அவர் நேசித்தார். அரவிந்தர் தனது வாழ்நாளில் அதிக நாட்கள் குஜராத்திலும், புதுச்சேரியிலும் தான் வாழ்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு காசி தமிழ்சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் மொழியின் பெயரால் அரசியல் செய்வதை விரும்பவில்லை. அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும், ஆன்மிக சக்தியாகவும் விளங்கினார்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்லாமல் ஆன்மிக சக்தியையும் மேலே கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார். ஆன்மிக சக்தியுடன் உறுதியான நிலையை சுதந்திர வேட்கையை உருவாக்கி இந்தியாவை தலை நிமிரச் செய்தார். மனிதனில் இருந்து இறைவன் வரை நாம் ஒருவரை போற்றுகிறோம் என்று சொன்னால் அவருடைய செயல்பாடுகளே காரணமாகும். அரவிந்தரின் பிறப்பு இந்தியாவிற்கு ஒரு சக்தியை கொடுத்துள்ளது. அவர் சிறையில் இருக்கும் போது கூட மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை படித்து வந்தார். அவரை ஒடுக்குவதற்காக சிறையிலேயே பல்வேறு முயற்சிகள் நடந்தது. ஆனால் அந்த சக்திகள் அனைத்தையும் முறியடித்தார். இன்றைய இளைஞர்கள் அரவிந்தரின் ஆன்மிக சக்தியை உணர்ந்து நாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அவரது ஆன்மிக உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரி அரசு சார்பாக வைத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி அரவிந்தரின் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி ஆன்மிக தலம். பல சித்தர்கள், ஞானிகளை கொண்ட மாநிலம். இங்கு அரவிந்தர் வருகை தந்த போது பாரதியார் வரவேற்றார். ஆன்மிக பூமியில் தங்கிய பின்னர் அரவிந்தர் ஆன்மிக குருவாக உயர்ந்துள்ளார் என்பது உண்மையாகும். உலக அளவில் இந்தியா உயர்ந்த இடத்திற்கு வரும் என்று எண்ணினார். அதன்படியே தற்போது நமது நாடு உயர்ந்து வருகிறது. உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஆன்மிக பலம்:
ஆன்மிக பலம் இருந்தால் அந்த நாடு உலக அளவில் உயரும். தெய்வத்தின் பலத்தால் மட்டுமே மனிதர்கள் உயிர்ந்து வாழ முடியும் என்ற தத்துவத்தை ஞானிகள், மகான்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அரவிந்தர் புதுவையில் தங்கி வாழ்ந்ததால் இன்று இந்தியா உலக அளவில் உயர்ந்து உள்ளது. உலகில் பல இடங்களில் இருந்து அரவிந்தர் ஆசிரமத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். எனவே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. அனைவரும் இங்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரோவில் சர்வதேச நகரம் தொடங்கப்பட்டது. இது புதுச்சேரி, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது என முதல்வர் ரங்கசாமி பேசினார்.