இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மாமன்னன் படம்தான் நான் நடிக்கும் கடைசிப் படம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.  


ஆனால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உதயநிதி அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ளார். அதன்படி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


இந்நிகழ்வில் ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என சொல்லும் போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து வாழ்த்துப் பெற்ற அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்,  திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி, தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 


படங்களில் நடிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மாமன்னன் படம்தான் நான் நடிக்கும் கடைசிப் படம் எனவும் தெரிவித்துள்ளார். கமல் தயாரிப்பில் தான் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். 


உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 






கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு உதயநிதி செய்த பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அந்த பிரச்சாரம் எடுப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.


உதயநிதி ஸ்டாலினை நடிகராகவே கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மக்கள் அறிந்திருந்தனர். அவரின் தாத்தா கருணாநிதியின் மறைவுக்குப் பின் மெல்ல மெல்ல அரசியல் நிகழ்வுகளில் களம் கண்ட உதயநிதி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் முறையாக அரசியல் மேடையில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.