சுந்தர் சி. இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் நடப்பாண்டு மே மாதம் வரை அதிக வசூலை குவித்த படங்கள் பற்றி காணலாம். 


சரிவை நோக்கி தமிழ் சினிமா


2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம் தொடங்கி விட்டது எனலாம். அந்த அளவுக்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியும் எதுவும் வசூலை வாரி குவிக்கவில்லை. எதிர்பார்த்த படங்கள் கூட மண்ணை கவ்வியதால் விளைவு வேறு விதமாக செல்ல தொடங்கியது. ஆம் தியேட்டர்கள் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் வெளியான படங்களை எல்லாம் தூசு தட்டி ரீ-ரிலீஸ் செய்தனர். 


நம் ஊரில் எல்லாம் பழைய படங்கள் ஓடுவதற்காகவே ஒரு தியேட்டர் இருக்கும். நம் அப்பா தலைமுறையினர் எல்லாம் அந்த படங்களை தியேட்டரில் விரும்பி பார்த்தார்கள். இப்போது நம் தலைமையினர், அடுத்த தலைமுறையினர் எல்லாம் புதிய படங்களை நாட தொடங்கியதால் அந்த பழைய படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டு அந்த தியேட்டர்களும் மண்டபங்களாக மாறிவிட்டது. அல்லது செயல்படாமல் மூடப்பட்டு விட்டது. 


கொண்டாடும் இளம் ரசிகர்கள் 


இப்படியான நிலையில் தமிழ் சினிமாவில் நடப்பாண்டு வெளியான படங்கள் எல்லாம் தோல்வியடைந்தன. அதேசமயம் அவ்வப்போது ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வெளியான ரீ-ரிலீஸ் படங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. இதனைக் கண்ட தியேட்டர் உரிமையாளர்கள் ஒருகாலத்தில் சக்கைப்போடு போட்ட படங்களை எல்லாம் டிஜிட்டலுக்கு மாற்றியோ அல்லது இசையில் அப்டேட் செய்து வெளியிடுகிறார்கள். அந்த படங்களை ஏதோ புதுப்படம் ரிலீஸானதைப் போல ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.


இதற்கு மிகப்பெரிய உதாரணம் சமீபத்தில் வெளியான விஜய் நடித்த கில்லி படம். டிவி, செல்போன், லேப்டாப் என எல்லாவற்றிலும் ஆயிரம் முறை படம் பார்த்திருந்தாலும், தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்து வந்ததை கண்டு கோலிவுட்டே ஒரு கணம் ஆடிப்போனது. இப்படியான நிலையில் 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தமிழில் ஒரு படம் கூட ரூ.100 கோடி வசூலை பெறவில்லை என்பது  சோகமான விஷயமாக உள்ளது. 


கில்லி... அரண்மனை 4


நடப்பாண்டில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் ஆகிய படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. தற்போது கில்லி ரீ-ரிலீஸுக்கு பின்னால் மக்கள் தியேட்டருக்கு அரண்மனை 4 படம் மூலம் வர தொடங்கியுள்ளார்கள். இதனால் இந்த 5 படங்கள் மட்டும் தான் ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான வசூலை பெற்றுள்ளது. 


அயலான் ரூ.58.75 கோடியும், கேப்டன் மில்லர் ரூ.58 கோடியும், கில்லி படம் ரூ.25.75 கோடியும், அரண்மனை ரூ.22 கோடியும், லால் சலாம் ரூ.21 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் இந்தியன் 2, வேட்டையன், தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம், விடா முயற்சி, தங்கலான், கங்குவா, ராயன் என முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாவதை நம்பி திரையுலகமும், தியேட்டர் ஓனர்களும் காத்திருக்கின்றனர்.