Highest Grossing Movies 2023: நடப்பாண்டில் உலக அளவில் வெளியாகி அதிக வசூலை வாரிக்குவித்ததோடு, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஹாலிவுட் திரையுலகம்:


இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானாலும், வசூல் என்று பார்த்தால் அதில் ஹாலிவுட் திரையுலகமே தொடர்ந்து கோலோச்சி வருகிறது. ஆனால், நடப்பாண்டில் யாரும் எதிர்பாரத விதமாக நடைபெற்ற எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்தம் ஹாலிவுட்டையே ஸ்தம்பிக்கச் செய்தது. இருப்பினும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான பல திரைப்படங்கள் வழக்கம்போல், உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகளை வசூலாக வாரியது. மொத்தமாக நடப்பாண்டில் மட்டும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அந்த வகையில், உலகளவில் பெரும் வசூல் வேட்டை நடத்திய முதல் 10 படங்களின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 


10. Ant-Man and the Wasp: Quantumania:


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் நிறுவனத்திற்கு நடப்பாண்டு போதாத காலம் என்று தான் கூற வேண்டும். காரணம், அந்த நிறுவனம் இந்த ஆண்டில் வெளியிட்ட அனைத்து படங்களுமே தோல்வியை சந்தித்துள்ளன. காங் கதாபாத்திரம் மீதான பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான Ant-Man and the Wasp: Quantumania, கலவையான விமர்சனங்களை பெற்றதல் உலகம் முழுவதும் மொத்தமாக 476 மில்லியன் அமெரிக்க டாலர்களை (3,959 கோடி)  வசூலித்துள்ளது. IMDB-யில் 6.1 புள்ளிகளை பெற்றுள்ளது.


09. Elemental:


டிஸ்னி நிறுவன தயாரிப்பில் வெளியான அனிமேடிக் திரைப்படமான எலிமெண்டல் சர்வதேச அளவில் நல்ல வ்மர்சனங்களை பெற்றது. இதனால், மொத்தமாக 496.17 மில்லியன் அமெரிக்க டாலர்களை (4,126 கோடி) வசூலித்துள்ளது. IMDB-யில் 7 புள்ளிகளை பெற்றுள்ளது.


08. Mission: Impossible – Dead Reckoning Part One: 


டாம் க்ரூஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மிஷன் இம்பாசிபிள் படத்தின் 9வது பாகம், நல்ல விமர்சனங்களையே பெற்றது. ஆனால், அடுத்தடுத்து வெளியான சில தரமான ஹாலிவு திரைப்படங்களில் மிஷன் இம்பாசிபிள் படத்தின் வசூல் குறைந்தது. இறுதியில் 567.53 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.4,720 கோடி) வசூலித்தது. IMDB-யில் 7.8 புள்ளிகளை பெற்றுள்ளது.


07. The Little Mermaid:


டிஸ்னி நிறுவனத்தின் மற்றொரு அனிமேஷன் திரைப்படமான் தி லிட்டில் மெர்மெய்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினார். இதனால் மொத்தமாக 569.62 மில்லியன் அமெரிக்க டாலர்களை (4,737 கோடி) வசூலித்தது. IMDB-யில் 7.2 புள்ளிகளை பெற்றுள்ளது.


06. Spider-Man: Across the Spider-Verse:


சோனி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட அனிமேஷன் திரைப்படமான ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ் திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக பெரும் வெற்றியை பதிவு செய்தது. இரண்டாம் பாகமும் வெளியாக உள்ள நிலையில், மொத்தமாக 690.51 மில்லியன் அமெரிக்க டாலர்களை (5,743 கோடி) வசூலித்துளது. IMDB-யில் 8.6 புள்ளிகளை பெற்றுள்ளது.


05. Fast X:


கார் ரேஸை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வின் டீசலின் ஃபாஸ்ட் சாகாவின் பத்தாவது பாகம், ஆக்‌ஷன் கதைக்களத்தை மையமாக கொண்டு வெளியான ஃபாஸ்ட்-X கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதன் பட்ஜெட்டிற்கு குறைவான வசூல் என்றாலுமே மொத்த வசூலாக, 704.87 மில்லியன் அமெரிக்க டாலர்களை (5,862 கோடி) ஈட்டியுள்ளது. IMDB-யில் 5.8 புள்ளிகளை பெற்றுள்ளது.


04. Guardians of the Galaxy Vol. 3: 


தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் மார்வெல் நிறுவனத்திற்கு கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - 3ம் பாகம் பெரும் நம்பிக்கையாக அமைந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல விமர்சனங்களோடு, மொத்த வசூலாகவும் 845.55 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,032 கோடி) அள்ளியது. IMDB-யில் 7.9 புள்ளிகளை பெற்றுள்ளது.


03. Oppenheimer:


கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி இயக்கத்தில் வெளியான ஓப்பன்யெய்மர் நல்ல வரவேற்பை பெற்றதோடு, உலகம் முழுவதும் 952 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,918 கோடி) வசூலித்தது. IMDB-யில் 8.4 புள்ளிகளை பெற்றுள்ளது. மிஷன் இம்பாசிபிள் படத்தின் வசூல் குறைந்ததற்கு ஓப்பன்ஹெய்மர் படமும் ஒரு முக்கிய காரணம்.


02. The Super Mario Bros.:


துவண்டு கிடந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கே புத்துணர்ச்சி அளித்த படமாக தி சூப்பர் மேரியோஸ் ப்ரோஸ் அமைந்தது. உலகம் முழுவதும் இப்படம் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (11,311 கோடி) வசூலாக வாரிக் குவித்தது. IMDB-யில் 8.4 புள்ளிகளை பெற்றுள்ளது.


01. Barbie:


மார்க்ரட் ராபி நடிப்பில் வெளியாக அமோக வரவேற்பு பெற்ற பார்பி திரைப்படம், உலகம் முழுவதும் 1.44 பில்லியன் அமெரிக்க டாலர்களை (11,976 கோடி) வசூலித்தது. இதன் மூலம் நடப்பாண்டில் உலகளவில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. IMDB-யில் 7 புள்ளிகளை பெற்றுள்ளது.