2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளதால் திரைபிரபலங்கள் மாற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் ஒரு சில டோலிவுட் ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.


கடத்தல்காரனாக அல்லு அர்ஜுன் :


புஷ்பா திரைப்படத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தல் செய்யும் கடத்தல்காரனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். அவரின் நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இருப்பினும் ஒரு கடத்தல் செய்யும் நபர், காவல் நிலையத்தை எரிப்பது, எதிரிகளை கொலை செய்வது என ஒரு சமூக விரோதி கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது சரியானது அல்ல என சச்சையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


 



சர்ச்சையான கருத்துகள் :


மேலும் அப்படத்தில் மக்களுக்கு  நல்லது சொல்லும் அளவுக்கு பெரிதாக எந்த ஒரு கருத்தும் இல்லை என்பது பல டோலிவுட் நடிகர்களின் கருத்தாக இருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது போலவே நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டதிலும் சில சர்ச்சையான கருத்துகள் எழுந்துள்ளன. அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ்பாபு, வெங்கடேஷ், நானி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


புஷ்பாவில் மகேஷ் பாபு :


முதலில் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அணுகியது நடிகர் மகேஷ் பாபுவை தானாம். கதை பிடித்து போனதால் மகேஷ் பாபுவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். சில கருத்து வேறுபாடுகளால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மகேஷ் பாபு இப்படத்தில் இருந்து விலகவே அல்லு அர்ஜுன் ஒப்பந்தமானார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டுளது மகேஷ் பாபுவுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரம்.  


இப்போது மட்டும் ஏன் சர்ச்சை ?


இருப்பினும் கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கு தேசிய விருது வழங்குவது இது ஒன்றும் புதிதல்ல.  'நாயகன்' படத்திற்காக கமல்ஹாசன், 'பண்டிட் குயின்' ஹிந்தி படத்திற்காக பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்த சீமா பிஸ்வாஸ், 'களியாட்டம்' என்ற மலையாள திரைப்படத்திற்காக சுரேஷ் கோபி இப்படி பலருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது வரையில் நடிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு விருது வழங்கபட்டது அதற்காக எந்த ஒரு சர்ச்சையும் எழவில்லை. ஆனால் அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேசிய விருது மட்டும் பெரிய சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.