மேற்கத்திய நாடுகளின் காமிக்ஸ் சந்தையை ஆக்கிரமித்து விற்பனையில் பெரும் சாதனையை படைத்தது டிசி நிறுவனம். அதில் இடம்பெற்றுள்ள சூப்பர்மேன், வண்டர் உமன் போன்ற பல கதாபாத்திரங்கள் உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது. குறிப்பாக, பேட்மேன் மற்றும் ஜோக்கர் கதாபாத்திரமும், அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகளுக்கும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு தான், அவர்களை மையப்படுதி பல்வேறு புதிய கதாபாத்திரங்களை உருவாக்கவும் வழிவகுத்துள்ளது.  பேட்மேன் மற்றும் ஜோக்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் அளவிற்கு, டிசி நிறுவனம் சார்பில் வெளியாகும் மற்ற சூப்பர் ஹீரோ படங்களுக்கு கிடைப்பதில்லை என்பதே உண்மை.


 


2019ல் வெளியான ஜோக்கர்: 


அதற்காக சான்றாக அமைந்தது தான் 2019ம் ஆண்டு, டாட் பிளிப்ஸ் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படம். மனநிலை பாதிக்கப்பட்ட நபராக ஜாக்குவின் பீனிக்ஸின் கச்சிதமான நடிப்பில் வெறும் 55 முதல் 77 மில்லியன் செலவில் உருவான இப்படம், உலக அளவில் இன்றைய தேதிக்கு ரூ.8.2 ஆயிரம் கோடியை வசூலித்து பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. ஒரு சாதாரன மேடை நடிகனை இந்த சமூகம் எத்தைய மோசமான நபராக மாற்றுகிறது என்பதை மையமாக கொண்டே இப்படம் உருவானது. பேட்மேன் போன்ற முக்கிய கதாபாத்திரம் இதில் தோன்றா விட்டாலும், நேர்த்தியான கதை, கச்சிதமான படைப்பு ஆகியவற்றால் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களாலும் ஜோக்கர் திரைப்படம் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக, சிறந்த நடிகர் உள்ளிட்ட இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. அதைதொடர்ந்து,  ஜோக்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.


 


”ஜோக்கர்” படத்தின் இரண்டாம் பாகம்:


இரண்டாம் பாகத்திலும் ஜாக்குவின் ஃபீனிக்ஸ் ஜோக்கர் கதாபாத்டித்தில் நடிக்க, ஹார்லி குவீன் கதாபாத்திரத்தில் லேடி காகா நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு,  ஜோக்கர் Folie à Deux  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான மனநல கோளாறை குறிக்கும் இந்த தலைப்பின் அடிப்படையில், ஜோக்கர் மற்றும் ஹார்லி குவீன் கதாபாத்திரங்கள் இடையேயான உறவை விளக்கும் விதமாக இந்த படத்தின் கதை அமையும் என உணர்த்துகிறது.






ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: 


இந்நிலையில், ஜோக்கர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக இயக்குனர் டாட் பிளிப்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜோக்கர் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் பங்கேற்க, நடிகர் ஜாக்குவின் ஃபீனிக்ஸ் தயாராகி வருவது தொடர்பான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.