2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதி அட்டவணை போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து உள்ளது. 


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.


2 பருவத் தேர்வுகள்


புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2021-22 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு நடைபெற்றது. 




ஏப்ரல் - மே மாதத்தில் பொதுத் தேர்வுகள்


அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 17ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது. 


இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15 முதல் தேர்வு தொடங்குகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 


இந்த நிலையில், 2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே பொதுத் தேர்வு பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகியது. எனினும் இது போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, ’’பொதுத் தேர்வு குறித்த தேதிகள் அடங்கிய பல்வேறு அட்டவணைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவை அனைத்தும் போலியானவை. விரைவில் உண்மையான தேதிகள் அடங்கிய பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும். மாணவர்களும் பெற்றோரும் அதிகாரப்பூர்வத் தகவலுக்காகக் காத்திருக்க வேண்டும்’’ என்று சிபிஎஸ்இ மூத்த அதிகாரி தெரிவித்தார்.


தேர்வு அட்டவணை பற்றிய தகவல்களுக்கு, மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களை மட்டுமே காண வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.