தமிழ் சினிமாவில் மீண்டும் சாதிய ரீதியிலான திரைப்படங்கள் வெளியாவது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கடுமையாக விமர்சித்துள்ளார். 


தேவையில்லாத ஒன்றுதான்


நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், தொகுப்பாளர், சமீபத்தில் வெளியான ராவணக்கோட்டம், கழுவேற்றி மூர்க்கன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டு  மீண்டும் சாதி ரீதியிலான படங்கள் எடுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த திருப்பூர் சுப்பிரமணியம், ”இது தேவையில்லாத ஒன்றுதான். சமீபத்தில் வந்த இரண்டு மூன்று இயக்குனர்கள் இந்த மாதிரியான சாதி படங்களை இயக்க எடுக்க ஆரம்பித்தார்கள். வெற்றிமாறன், மாரி செல்வராஜ், , மோகன்ஜி, முத்தையா போன்ற இயக்குனர்கள் மாற வேண்டும்.


சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. இதையே சாதி ரீதியிலான படங்கள் எடுக்கப்படுவது இதற்கு இடையூறாகவே அமையும். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி ஆகியோர் நடித்த காலகட்டத்தில் எந்த மாதிரியான சாதியா ரீதியிலான படங்கள் வரவில்லை. என்னை பொறுத்தவரை சினிமாவில் சாதி மதங்களை காட்ட தேவையில்லை. உண்மை கதை என்கிற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்களில் அது இருக்கும். ஆனால் இது தேவையில்லாத ஒன்றுதான்.


சாதியை உயர்த்தி பிடித்தாலும் தப்புதான் 


அதே சமயம் தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் சாதியை உயர்த்தி பிடித்திருந்தாலும் மற்ற சாதியை குறை சொல்லி இருக்க மாட்டார்கள். அதை நியாயப்படுத்தி பேச விரும்பவில்லை. அதுவே தவறு தான். எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் சாதி ரீதியிலான ஏதாவது பட டைட்டில் ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படி ஒன்றே இருக்காது. காரணம் இன்றைக்கு மக்கள் இந்த மாதிரி கூட்டம் கூட்டமாக இருந்தது இல்லை. நான் சினிமாவில் வந்து 43 வருடங்கள் ஆகி விட்டது. யாரிடமும் இதுவரை சாதி கேட்டதில்லை. யாரும் என்னிடம் சாதியை பற்றி பேசியதில்லை. எந்த சாதியும் இல்லாத தொழில் சினிமா.


நாமெல்லாம் படித்திருக்கிறோம் அதனால் எதற்காக சாதியை பற்றி பேச வேண்டும். அன்றைக்கு இருந்த பழைய குட்டையை கிளரும் வேலையை இன்றைக்கு இருப்பவர்கள் செய்கிறார்கள். சாதியை உணர்வுகளை தூண்டுகிறார்கள்.


இட ஒதுக்கீடு மூலம் இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பொறுப்புகளில் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் முன்னால் எல்லாம் கைகட்டி தான் இருக்கிறார்கள்.  ஆனால் சாதி ரீதியிலான படம் எடுப்பவர்கள்  அன்றைக்கு அப்படி உங்களை பண்ணினார்கள் என சொல்கிறார்கள். இல்லாத ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள். நீங்கள் எல்லோரும் சமம் என நினையுங்கள். எந்த சாதியை பாகுபாடும் இல்லாத சினிமாவிற்கு வந்து தாழ்த்தப்பட்டவர்களை நாங்கள் உயர்த்துகிறோம் என சொல்கிறார்கள்.


மனிதர்களில் என்ன தாழ்த்தப்பட்டவர்கள்?


நான் கேட்கிறேன் மனிதர்களில் என்ன தாழ்த்தப்பட்டவர்கள்?.. நீங்கள் ஏன் அவர்களை அப்படி உருவகப்படுத்துகிறீர்கள்? எல்லோருமே மனிதர்கள் தான். அன்றைக்கு இருந்த என் தாத்தா, முப்பாட்டன் உள்ளிட்டோர் படிக்காததால் அவர்களுக்கு சாதி பெரிதாக தெரிந்தது. ஆனால் நான் எனக்கு பின்னால் உள்ள சந்ததிகள் படித்த நிலையில் அவர்கள் யாருமே சாதி பார்ப்பதில்லை.


அதே சமயம் இதற்கு முந்தைய தலைமுறையில் வெளியான படங்களில் கடைசியில் வில்லன்கள் கூட திருந்துவார்கள். எம்ஜிஆர் கூட தன் படங்களில் வில்லனை கொல்ல மாட்டார். திருத்த தான் செய்வார். அப்படி வில்லனைக் கூட நல்லவனாக காட்ட முயற்சி செய்த நிலையில் தற்போது கதாநாயகனை கூட வில்லனைக் காட்டிலும் கொடூரமானவனாக காட்டுகிறார்கள். சாதாரண இளைஞர்கள் மத்தியில் வெறியை தூண்டுவதா இவர்களது பாலிசி?.  இதையெல்லாம் இவர்கள் மாற்ற வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.