ஆண்டுதோறும் தாமதமாக வரும் பருவமழை கூட சில நேரம் சீக்கிரமாக வந்துவிடலாம் . ஜேம்ஸ் கேமரூன் ஆண்டுக்கு இரண்டு படங்களைக் கூட எடுத்துவிடலாம், சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் படுவேகமாக முடிந்துவிடலாம், தமிழ் நாட்டில் இருக்கும் கருவேல மரங்கள் மொத்தமும் அகற்றப்பட்டு விடலாம். ஆனால் நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வந்ததாக சரித்திரத்தில் இருக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.


நடிகர் சிம்புவுக்கு மீண்டும் ரெட் கார்டு வழங்க தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. மேலும், சிம்புவுடன் சேர்த்து நடிகர் அதர்வா, எஸ்.ஜே. சூர்யா, விஷால், யோகிபாபு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


என். ராமசாமி தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுகூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு கால்ஷீட் தருவதில் தாமதப்படுத்தி வந்த காரணத்திற்காக ஐந்து நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாம் சங்கம். இந்த நடிகர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முறையாக நடிகர்கள் சார்பில்  விளக்கமளிக்கப்படாவிட்டால் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது சங்கம்.


ரிப்பீட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு


ரெட் கார்ட் சர்ச்சையில் சிக்குவது மற்ற நடிகர்களுக்கு எப்படியோ, ஆனால் சிலம்பரசனுக்கு புதிதான ஒன்றில்லை. ஏற்கனவே  AAA படத்தின் படப்பிடிப்பிற்கு சரியாக வராததால் அவர் மீது புகார் அளித்தார் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.


சிம்புவின் இந்தச் செயலால் 2 கோடி ரூபாய் நஷ்டமடைந்தார் மைக்கேல். மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, சிம்பு படத்திற்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு படப்பிடிப்பிற்கு கால்ஷீட் தர தாமதித்ததால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்தார். மேலும் மாநாடு  படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்தார். கடும் போராட்டத்திற்கு பின் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் பத்து தல படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு தாய்லாந்து சுற்றுலா சென்றுவிட்டார் சிம்பு. வேறு வழியில்லாமல் அவர்மீது புகாரளித்தார் தயாரிப்பாளர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவை இரண்டு ஆண்டுகள் டீலில் விட்டார் சிம்பு. மேலும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் சிம்பு மீது ஏற்கெனவே புகார் அளித்துள்ளார்.


இத்தனை புகார்களை தன் மீது வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டு கொஞ்ச நாட்களுக்கு படப்பிடிப்பிற்கு சரியாக நேரத்திற்கு வந்துகொண்டிருந்தார் சிலம்பரசன். தனது திறமைகளுக்காக எத்தனையோ உயரங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் சிலம்பரசனுக்கு இருக்கின்றன. ஆனால், அவரது வீட்டில் விருதுகளுக்கு பதிலாக ரெட் கார்டுகளை சேர்த்து வைக்க முடிவுசெய்துவிட்டாரா சிம்பு என்று தெரியவில்லை என கவலை தெரிவித்து வருகிறது கோலிவுட் வட்டாரம்!